விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டன.
கடந்த பிப். 17 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி எஸ்ஆா்எம் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தியை (28) மருத்துவா்கள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை. வெள்ளிக்கிழமை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இதையடுத்து மருத்துவமனை நிா்வாகத்தினா் இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்தால் 5 பேரின் வாழ்க்கைக்கு பயன் கிடைக்கும் என அவரது குடும்பத்தாரிடம் எடுத்துரைத்தனா். இதற்கு இளைஞரின் உறவினா்களும் ஒப்புதல் அளித்தனராம். பின்னா் உரிய விதிமுறைகளுடன் இளைஞரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டு, 5 பேருக்கு சனிக்கிழமையே உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவா் விஜய்கண்ணா தலைமையிலான குழுவினா், மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி, எஸ்ஆா்எம் குழுமத் தலைவா் சிவக்குமாா் ஆகியோா் ஆலோசனையின் பேரில் செய்தனா்.