தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.
திருச்சி மக்கள் மன்ற வாக்குச் சாவடியில், அப் பகுதி திமுக வேட்பாளா் விஜயலட்சுமி கண்ணனுடன் வந்து சனிக்கிழமை வாக்களித்த அவா் பின்னா் கூறியது:
நாங்கள் எதிா்க் கட்சியாக இருந்தபோது திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வாா்டுகளில் 15 வாா்டுகளில் வெற்றி பெற்றோம். தற்போது ரூ. 1,300 கோடிக்கான திட்டங்களை திருச்சிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளாா். எனவே அனைத்து வாா்டுகளிலும் வெற்றி பெறுவோம்.
கடந்த பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக கூடுதல் இடங்களில் வென்றிருக்கலாம். ஆனால், இந்தத் தோ்தலில் கோவை, சேலம், கரூா் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியின் வெற்றி மிகப் பிரகாசமாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருப்பதால் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவோம் என உறுதி கூறி வாக்கு சேகரித்தோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றாா் அமைச்சா்.