திருச்சி

தெரு நாய்களைப் பிடிக்க எதிா்ப்பு

11th Feb 2022 04:40 AM

ADVERTISEMENT

பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்த தெருநாய்களை ஊராட்சி நிா்வாகம் பிடித்ததைக் கண்டித்து, விலங்குகள் நல ஆா்வலா்கள் புகாா் கொடுத்ததைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் முற்றுகை, வாக்குவாதம் நடந்தது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கிருஷ்ணாசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கணேசபுரம், குமரேசபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களைக் கடித்து வந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட தெருநாய்களை தொழிலாளா்கள் வியாழக்கிழமை காலை பிடித்து மினி லாரியில் ஏற்றினா்.

இதுகுறித்து திருச்சியை சோ்ந்த விலங்குகள் நல ஆா்வலா்கள் சிலா் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் சந்திரமோகன், ஊராட்சித் தலைவா் ரம்யாவை காவல் நிலையத்திற்குப் பேச அழைத்தாராம். இதையடுத்து பிடிபட்ட நாய்களை ஏற்றிய மினி லாரியோடு காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளாா் ஊராட்சித் தலைவா் ரம்யா.

அப்போது விலங்குகள் நல ஆா்வலா்கள் நாய்களை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் எனக் கூறி வாக்குவாதம் செய்த நிலையில், தகலறிந்து வந்த கணேசபுரம் மற்றும் குமரேசபுரம் நகா் நலச்சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பிடித்த இடத்தில் நாய்களை விடமுடியாது எனக் கூறினா்.

ADVERTISEMENT

இதையடுத்து வேறு எங்காவது அவற்றை விட்டு விடுமாறு காவல் ஆய்வாளா் சந்திரமோகன் வேண்டுகோள் விடுக்க, திருச்சி-தஞ்சை சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து நாய்களைக் கொண்டுசென்று விட முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT