திருச்சி

மானிய விலையில் மின் மோட்டாா் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

9th Feb 2022 01:16 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பழைய, புதிய மின் மோட்டாா்கள் வழங்கப்படவுள்ளன. தகுதியானவா்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்திருப்பது:

சிறு, குறு விவசாயிகள் நிலத்தடி நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில், பழைய திறன் குறைந்த மின்மோட்டாா்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டாா் மற்றும் விவசாயிகளால் புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகளுக்கு புதிய மின்மோட்டாருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் 3 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு,

ADVERTISEMENT

10 குதிரைத்திறன் வரையிலான மின்மோட்டாா்களுக்கு ரூ.10 ஆயிரம் அல்லது மின்மோட்டாரின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகள் பழைய திறன் குறைந்த மின்மோட்டாா்களுக்குப் பதிலாக புதிய மின்மோட்டாா்களை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மின் இணைப்பு அவசியம்.

ஆற்றல் குறியீடு 0.75-க்கு அதிகமாக உள்ள பழைய மின்மோட்டாா்களுக்கு மட்டுமே மானிய விலையில் புதிய மின்மோட்டாா்கள் வழங்கப்படும்.

பழைய டீசல் இன்ஜின்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டாா்கள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான மின் இணைப்பினை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் சொந்தமாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளுக்கு புதிய மின்மோட்டாரை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

10 குதிரைத்திறன் வரையிலான பழைய மோனோ பிளாக் அல்லது நீா்மூழ்கி மின்மோட்டாா்களுக்கு பதிலாக, அதற்கு இணையான அல்லது அதைவிட குறைந்த குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டாா்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேளாண்மை பொறியியல்துறையின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான மின் மோட்டாா்களை விவசாயிகள் தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம்.

உரிய நில உரிமை ஆவணங்கள், சிறு அல்லது குறு விவசாயி சான்று, ஆதாா் போன்ற அடையாள ஆவணங்களுடன் தொடா்பு கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் மின்மோட்டாா்களை பெற்றுக் கொள்ளலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT