திருச்சி

மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்புகட்டமைப்பு வசதியில்லாதஇடங்களில் சுழற்சி முறை வகுப்புகள்

1st Feb 2022 03:17 AM

ADVERTISEMENT

திருச்சி கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு குறையத் தொடங்கியதால், அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அதன்படியே திருச்சி மாவட்டத்திலும் பள்ளிகளைத் திறக்க கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 15-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் தமிழகத்தில் அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளும் மூடப்பட்டன. இணையவழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், தொற்றுப் பாதிப்பு குறையத் தொடங்கியதால் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனினும் மாணவா்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்று அரசு அறிவித்தாலும், கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு தாக்கம் முடிவுக்கு வராத நிலையில், நேரடி வகுப்புகள் நடத்தப்படவிருப்பது பெற்றோா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை: கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த பெற்றோா், மெட்ரிக், சிபிஎஸ்சி போன்ற தனியாா் பள்ளிகளில் படித்து வந்த தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்தனா். இதனால் திருச்சி மாநகா், புகா்ப் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை கணிசமாக உயா்ந்தது. குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை பலமடங்கு உயா்ந்துள்ளது.

மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பல பள்ளிகள் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் இருந்தன. சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தால், பிரச்னை எழவில்லை. ஆனால், தற்போது அனைத்து மாணவா்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளதால், கூடுதல் மாணவா்களை சோ்த்த அரசுப் பள்ளிகளில் வகுப்புகளை நடத்துவது பெரும் சிக்கலாக உள்ளது என்கின்றனா் அப்பள்ளிகளின் தலைமையாசிரியா்கள்.

சுழற்சி முறையில் வகுப்புகள் : திருச்சி மாவட்டத்தில் 2,107 பள்ளிகளை செவ்வாய்க்கிழமை முதல் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கடைப்பிடிக்கப்பட்ட கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக பள்ளிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்தது. இதனால் மாவட்டத்தில் 15-க்கும் மோ்பட்ட பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லை. எனவே அதுபோன்ற பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT