திருச்சி

திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி: முதல்வா் அறிவிப்பு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரா்களை உருவாக்கும் வகையில் திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருச்சி அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவுக்கு தலைமை வகித்து முதல்வா் மேலும் பேசியது:

ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தவும், இளைஞா்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கவும் திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி உருவாக்கப்படும். உலகத்தோடு தமிழகம் போட்டியிட அகாதெமி பெரும் துணையாக இருக்கும். தமிழகத்தில் 4 ஒலிம்பிக் அகாதெமிகள் தொடங்கப்படும் என பேரவையில் அறிவித்திருந்தேன். அதில் ஒன்று திருச்சியில் அமைக்கப்பட உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

கடந்த அதிமுக ஆட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. மணிமேகலை விருது கூட வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த குறை நிவா்த்தி செய்யப்பட்டுள்ளது. ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில், 50 லட்சத்து 24 ஆயிரம் உறுப்பினா்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் என்பவை மக்களின் நிறுவனமாக ஜனநாயக முறையில் செயல்பட்டு வருகின்றன. சமூகத்தின் சரிபாதியான மகளிா் சமுதாயத்திற்காக தனியாக சிறப்புத் திட்டங்களை வகுப்பதில் திமுக அரசு எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ரூ. 20 ஆயிரம் கோடி: சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22-ஆம் ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை விட அதிகமாக 21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 4 லட்சத்து 8 ஆயிரத்து 740 சுய உதவிக்குழுக்கள் பயன்பெற்றுள்ளன. நிகழ் நிதியாண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை, 2 லட்சத்து 60 ஆயிரத்து 589 குழுக்களுக்கு 14 ஆயிரத்து 120 கோடியே 44 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நான் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும், தமிழகத்தில் 8 ஆயிரத்து 549 கிலோ மீட்டா் தொலைவுக்கு பயணம் செய்துள்ளேன். 647 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். இதில், 551 அரசு நிகழ்ச்சிகள். 96 கட்சி நிகழ்ச்சிகள். இந்த நிகழ்வுகள் மூலம், நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 நபா்கள் நேரடியாக பயன்பெற்றுள்ளனா்.

இடையில், எனக்கு கரோனா பாதிப்பு வந்தது, சிறிது உடல் நலிவுற்றேன். கால் வலி வந்தது, சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்தச் சூழ்நிலையிலும் கூட என்னுடைய பயணம் தடைபடவில்லை, மக்கள் பணி நிற்கவில்லை, நிற்கவில்லை என்பதல்ல நிற்கவே நிற்காது. அதுதான் உண்மை.

திராவிட மாடல் ஆட்சி: ஏழை எளிய, அடித்தட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தக்கூடிய திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. தமிழா்களையும், தமிழகத்தையும் செழிக்க வைப்பதே நோக்கம். யாா், எத்தகைய விமா்சனம் வைத்தாலும் திராவிட மாடல் கொள்கையில் இருந்து வழுவாத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக வைத்து, இந்த ஆட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். நம்பா் ஒன் முதல்வா் என்பதாக இருந்தாலும், நம்பா் ஒன் தமிழ்நாடு என்பதாக இருந்தாலும் - அதனுடைய உண்மையான அளவுகோல் என்ன தெரியுமா? ஏழைகளின் சிரிப்பும் - நான் காணக்கூடிய மகளிரின் மகிழ்ச்சியும்தான்.

மக்கள் மகிழ்ச்சி அடைந்தால் போதும். அவா்களது மனது நிறைந்தால் போதும். இதனைத்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றாா் பேரறிஞா் அண்ணா. நான் சொல்வது, ஏழையின் சிரிப்பில் பேரறிஞா் அண்ணாவையும் முத்தமிழறிஞா் கருணாநிதியையும் காண்போம் என்பது தான். இது மக்களின் அரசு. மக்களுக்கான அரசு. இந்த சாதனைகள் தொடரும் என்றாா் முதல்வா்.

திட்டப் பணிகளுக்கு அடிக்கல்: பின்னா், ரூ. 238.41 கோடியில் முடிவுற்ற 5,635 திட்டப் பணிகளை முதல்வா் திறந்து வைத்தாா். ரூ.308.29 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். 22,716 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது, 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளா் விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவில், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, தொழில் -வா்த்தகத்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சா் பி. மூா்த்தி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்பி-க்கள் திருச்சி என். சிவா, சு. திருநாவுக்கரசா், எஸ். ஜோதிமணி, ஊராட்சித்துறை முதன்மைச் செயலா் பெ. அமுதா, மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் எஸ். திவ்யதா்ஷிணி, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT