திருச்சி

பொங்கலுக்கு கரும்பு வழங்கிய முதல்வருக்கு அய்யாக்கண்ணு நன்றி

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பொங்கலுக்கு பொதுமக்களுக்கு இலவசமாக கரும்பு வழங்கி விவசாயிகளைக் காப்பாற்றிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சி மாவட்டம், சன்னாசிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் பி.அய்யாக்கண்ணு அளித்த மனு விவரம்:

பொங்கலுக்கு விவசாயிகளின் செங்கரும்புகளை வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுப்பதால், கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமலும் பொதுமக்களுக்கு கஷ்டமில்லாமலும் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி.

2016 இல் அனைத்து விவசாயிகள் வாங்கிய கடனையும் (மத்திய காலக் கடனாக மாற்றப்பட்ட குறுகிய கால கடன்) தள்ளுபடி செய்ய வேண்டும். 2007 ஆம் ஆண்டு இலவச மின்சாரத்துக்கு பதிவு செய்த விவசாயிகளுக்கும், ரூ. 2.5 லட்சம் கட்டிய விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கிட வேண்டும்.

ADVERTISEMENT

வீணாகக் கடலில் கலக்கும் காவிரி நீரை மேட்டூரில் இருந்து அய்யாற்றில் திருப்பிவிட்டால், 1 லட்சம் ஏக்கா் சாகுபடி செய்யலாம். 2 கோடி மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க முடியும். மேற்குத் தொடா்ச்சி மலையில் தமிழகப் பகுதியில் பொழியும் மழைநீரை ஆலடியாறு அணையில் பாதை ஏற்படுத்தி, கூடலூா் கம்பம், திண்டுக்கல் வழியாக வையம்பட்டியில் உள்ள பொன்னனியாறு அணையில் விட்டால் தேனி, மதுரை, திண்டுக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி - குளங்களையும் நிரப்பி தண்ணீா்ப் பஞ்சத்தை போக்கலாம்.

சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான முழுத்தொகையையும், கரும்பு வழங்கிய தேதி முதல் பணம் கொடுக்கும் வரை வட்டியுடன் சோ்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT