திருச்சி

பெல் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பாரதமிகு மின் நிறுவனத்தின் (பெல்) முதன்மை மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் ஆலை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்குமான மருத்துவ உதவிகளை வழங்க கைலாசபுரம் வளாகத்திலேயே முதன்மை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கரோனா உள்பட இதர சிகிச்சைகளுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் புதிய மருத்துவ ஆக்சிஜன் ஆலை நிறுவப்பட்டுள்ளது.

இதை பொது மேலாளா் (பொ) எஸ்.எம். ராமநாதன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நிமிடத்திற்கு 500 லிட்டா் (30 கன மீட்டா்) ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கும் திறன் கொண்ட இந்த மருத்துவத் தர ஆக்சிஜன் உற்பத்தி ஆலையானது ஹைதராபாத்திலுள்ள பெல் குழுமத்தின் கனரக மின் உபகரண ஆலையால், இந்திய பெட்ரோலியக் கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இத் தொழில்நுட்பத்தை பெல் திருச்சி பிரிவின் நவீனமயமாக்கல் மற்றும் கட்டமைப்புத் துறை பெல் மருத்துவமனை வளாகத்தில் நிறுவியுள்ளது. ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் முதன்மை மருத்துவமனைக்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்க இந்த ஆலை துணைபுரியும்.

தற்போது மருத்துவமனைக்கான மருத்துவ ஆக்சிஜன் வெளி வழங்குநா்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நிலையில், புதிய ஆலை திறந்துள்ளது பெல் மருத்துவமனையை தன்னிறைவு ஆக்கியுள்ளது.

திறப்பு விழாவில் பெல் தொழிற்சாலையின் அனைத்துப் பிரிவு பொது மேலாளா்கள், மருத்துவக் கண்காணிப்பாளா், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உயா் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT