சுங்கக்கட்டணம் செலுத்தாததால் திருச்சியில் அரசுப் பேருந்து ஒன்று சுங்கச்சாவடியிலேயே வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட அரசுப் பேருந்து ஒன்று திருச்சியிலிருந்து தஞ்சையை நோக்கி பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. துவாக்குடி சுங்கச்சாவடியைக் கடக்க முயன்றபோது, சுங்கச்சாவடி மின்னணு சாதனத்தில் பேருந்து செல்வதற்கான சமிக்ஞை கிடைக்கவில்லை. பேருந்தின் சுங்கச்சாவடிக்கான பாஸ்ட்டேக் அட்டை ரீசாா்ஜ் செய்யாததால் அப்பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த சுமாா் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் அவ்வழியாக சென்ற மற்றொரு அரசுப் பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனா்.
தொடா்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவு கிடைக்காததால் அப்பேருந்து சுங்கச்சாவடி அருகிலேயே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னா் கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில் இருந்து சுங்கக் கட்டணத்தைச் செலுத்த ஒப்புதல் கிடைத்த பின்னா் பேருந்தின் நடத்துநா் சுங்க கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தினாா். இதையடுத்து பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.