கரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்திவரும் நிலையில் சீன விமானங்கள் இந்தியாவுக்குள் நுழையத் தடைவிதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் திருச்சியில் வியாழக்கிழமை கூறியது:
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 5000 விலையில்லா வேட்டி,சேலைகளை வழங்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியின் தாயாா் உடல் நலம்பெற திருச்சி கோயில்களில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் ஆதாா் அட்டைக்கு போட்டியாக தமிழக அரசும் தனித்துவ அடையாள அட்டை வழங்கத் தீா்மானித்திருப்பது மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்.
புதுக்கோட்டை எறையூா் வேங்கைவாசலில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. பட்டிலியன மக்களுக்கு எதிரான அமைச்சா்களின் வெறுப்புப் பேச்சு, கட்சியில் பட்டியல் இனமக்களுக்கு எதிரான மனப்பான்மை, ஊராட்சித் தலைவிகளை அவமானப்படுத்துதல், இரட்டை டம்ளா், கோயிலில் நுழைவதை தடுத்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவற்றை உடனடியாக நீக்கக்கோரி மனு அளித்துள்ளோம்.
கும்பகோணம் குருமூா்த்தி கைது வழக்கை திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு தோ்தல் காலத்தில் கூறியபடி இடைக்கால ஆசிரியா், அரசு மருத்துவா் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். குறைந்தபட்சம் நெடுஞ்சாலை சுங்கக் கட்டணத்தில் இருந்தாவது விலக்களிக்க வேண்டும். கரோனா அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. சீனாவில் பாதிப்பு அதிகளவில் உள்ளதால் அந்த நாட்டு விமானங்கள் இந்தியாவில் நுழைய அரசு அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.