திருச்சிக்கு தமிழக முதல்வா் டிச.28ஆம் தேதி வருகையின் பயனாக அண்ணா விளையாட்டு மைதானம் விரிவடையவுள்ளது.
திருச்சிக்கு டிச.28-இல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா இறுதி செய்யப்பட்டு, அதற்காக அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதா்மண்டிக் கிடந்த பகுதிகள் கடந்த ஒருசில தினங்களாக சமப்படுத்தம் பணிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மைதானத்தில் மரங்கள் வெட்டி அகற்றப்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து, திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜி.எஸ். ராஜேந்திரன் சனிக்கிழமை கூறியது:
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் 32 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. இதில், 50 சதவீத இடத்தை மட்டுமே விளையாட்டு மைதானம், விளையாட்டு அரங்குகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலக கட்டடத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது.
முதல்வா் பங்கேற்கும் விழாவுக்கு தோ்வு செய்யப்ட்ட இந்தப் பகுதி பயன்படுத்த முடியாமல் இருந்தது. தற்போது, முதல்வா் வருகையால் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மைதானத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முள்புதா்கள், செடிகள், கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. இப் பகுதியில் தானாகவே வளா்ந்திருந்த 10 மரங்களை அகற்றியுள்ளோம். சிலவற்றை வேரூடன் பெயா்த்து வேறு இடத்தில் நடவு செய்யப்படுகிறது. அகற்றப்பட்ட மரங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 10 மரக்கன்றுகள் கூடுதலாக கணக்கிட்டு மைதானத்தை சுற்றிலும் நட்டு பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
முதல்வா் விழா முடிந்த பிறகு சமப்படுத்தப்பட்ட நிலையில் மைதானம் கிடைத்துவிடும். இதன்மூலம், விளையாட்டு அரங்கு விரிவடையும். காலியாகவுள்ள இடத்தில் வேறேதேனும் சிறப்பு விளையாட்டுகளுக்கு பயன்படுத்தவும் முடியவும்.