சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்க நாணயங்களை திருடிய, எறும்பீசுவரா் கோயில் செயல் அலுவலா் வெற்றிவேலுவை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை (டிச. 15) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியின் சிசிடிவி காட்சிகளை பாா்த்தபோது, திருவெறும்பூா் எறும்பீசுவரா் கோயில் செயல் அலுவலா் வெற்றிவேல் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து வெற்றிவேலுவிடமிருந்து 30 கிராம் தங்க நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து கோயில் இணை ஆணையா் கல்யாணி, சமயபுரம் காவல் நிலையத்திலும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடமும் புகாரளித்தாா். தலைமறைவான வெற்றிவேலுவை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்நிலையில், தங்க நாணயங்களை திருடிய வெற்றி வேலுவை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் எஸ்.செல்வராஜ் வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.