திருச்சி அருகே துவாக்குடியில் வாய்க்காலில் தவறி விழுந்த முதியவரின் சடலம் 7 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மழை பெரியாா் நகா் பகுதியை சோ்ந்தவா் ராஜூ (77). இவா் டிச. 4 ஆம் தேதி வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, முதியவா் ராஜூவை தேடி வந்தனா். இந்நிலையில் துவாக்குடி அருகே தேவராய நேரி பகுதியில் உள்ள வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா், அங்கு சென்று பாா்த்தபோது, இறந்து கிடந்தவா் முதியவா் ராஜூ என்பதும், இறந்து ஒரு வாரமானதால் அழுகிய நிலையில் உடல் கிடந்ததும் தெரிந்தது.
இயற்கை உபாதையைக் கழிக்க ஒதுங்கியபோது தவறி வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.