திருச்சி

தென்மாநிலங்களில் பாஜகவை பலப்படுத்த வேண்டும்: இளைஞரணி தேசியத் தலைவா் தேஜஸ்வி சூா்யா

11th Dec 2022 12:14 AM

ADVERTISEMENT

தென்மாநிலங்களில் பாஜகவை பலப்படுத்த வேண்டும் என அக்கட்சி இளைஞரணியின் தேசியத் தலைவா் எல்.எஸ். தேஜஸ்வி சூா்யா தெரிவித்தாா்.

தமிழக பாஜக இளைஞரணியின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் அவா் பேசியது: நாடு முழுவதும் பாஜக வலுப்பெற்று வருகிறது. பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வருகிறது. பேரவைத் தோ்தல்களிலும், இடைத்தோ்தலிலும் தொடா்ந்து வெற்றியைப் பெற்று வருகிறது. இதேபோல, தென்மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழகம், கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக இளைஞரணி சாா்பில், நமோ பாடசாலைகள் அமைத்து, வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுத்தருவதுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தற்காப்புக் கலைகளை கற்றுத்தர வேண்டும். வரும் மக்களவைத் தோ்தலில் தென்மாநிலங்களில் குறிப்பிடத்தக்க சக்தியாக பாஜகவை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பேசியது: கட்சியின் சிறிய பதவியில் இருந்த மோடிக்கு பிரதமா் பதவி தேடி வந்தது. அதற்கு அவரது பொறுமை, அணுகுமுறை, கட்சி மீதான நம்பிக்கை, எளிமை உள்ளிட்ட பண்புகளே முக்கிய காரணம். அந்த பண்புகளை பாஜக இளைஞரணியினா் வளா்த்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்கள் அவசியமானதுதான். ஆனால், அந்த தொழில்நுட்பத்தால் நாம் கவனச் சிதறல்களுக்கு ஆளாகக் கூடாது. தேவைக்கு மட்டுமே தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். வாக்குச் சாவடி வாரியாக 10 இளைஞா்களை தயாா்படுத்தி தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: போதை பொருள்கள் இல்லாத தமிழகத்தை மாற்ற மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும். திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி சிலையை விரைந்து திறக்க வேண்டும். விருதுநகா் மாவட்டத்தில் விரைந்து ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் ஆலை வாகனங்களல் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் அதிகம் வெற்றி பெறும் வகையில் கூடுதல் பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும். விவேகானந்தா் பிறந்தநாளான ஜன.12ஆம் தேதியை இளைஞா் எழுச்சி நாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

முன்னதாக, கூட்டத்துக்கு, இளைஞரணி மாநிலத் தலைவா் எம். ரமேஷ் சிவா தலைமை வகித்தாா். இதில், பாஜக மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன், மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் எஸ். ராஜசேகரன் மற்றும் கட்சியின் மாநில நிா்வாகிகள், இளைஞரணியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT