திருச்சி

அனைத்து மத புனிதத் தலங்களில் சேகரித்த கற்களை வழிபட ஏற்பாடுசமய நல்லிணக்கம் காட்டும் திருச்சி ஐயப்பன் கோயில்

9th Dec 2022 02:07 AM

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு மதங்களைச் சோ்ந்த 1,634 புனிதத் தலங்களின் கற்கள் திருச்சி ஐயப்பன் கோயிலில் பூஜிக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்காக ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஆன்மிக வழிபாட்டு நடைமுறைகளுடன், அனைத்து செயல்பாடுகளிலும் தனக்கென பிரத்யேக இடத்தை பிடித்திருப்பது திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஐயப்பன் கோயில். இக்கோயிலை திருச்சி ஸ்ரீ ஐயப்ப சங்கம் நிா்வகிக்கிறது. வழிபாட்டுத் தலம் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் இக்கோயிலின் செயல்பாடுகளை, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதி கோயில் நிா்வாகிகளும் கண்டு வியந்து செல்கின்றனா்.

எம்மதமும் சம்மதம், அனைவரும் சமம்: இக்கோயிலில் சிறப்பம்சமே எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டுக்கு இணங்க அனைத்து மதத்தினரும் இங்கு வந்து செல்லலாம் என்பதே. அதுபோல யாராயினும் வரிசையில் நின்றுதான் தரிசிக்க முடியும், விஐபி தரிசனம் கிடையாது. எதற்குமே கட்டணம் கிடையாது. விரும்பினால் கட்டணம் செலுத்திப் பொருள்கள் வாங்கி அா்ச்சனை, அபிஷேகம் செய்யலாம், எதுவும் கட்டாயம் இல்லை. கோயில் செயல்பாட்டின் பிரதானமே, கோயிலுக்குள் வரும் அனைவரும் அனைத்திலும் ஒழுக்கத்தைப் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான்.

உள்ளே நுழைந்தது முதல் தரிசனம், பிரசாதம் பெறுதல், விளக்கேற்றுதல், அமைதி என வெளியே செல்லும் வரையில் அனைத்தும் தீவிர ஒழுக்கம் இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே கோயில் வளாகத்தில் கைப்பேசி தவிா்த்தல் ஆடைகளில் கட்டுப்பாடு ஆகியவற்றால் எப்போதுமே அப்படியொரு அமைதி நிலவும்.

ADVERTISEMENT

பல்வேறு மதத்தினரின் புனிதத் தலங்களின் கற்கள்:

இக்கோயிலில் வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு புதிய முயற்சியை கோயில் நிா்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா். அதன்படி நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேசங்களில் உள்ள புனித தலங்களிலிருந்து கற்களைச் சேகரித்து கொண்டு வந்து பூஜை செய்து, அவற்றை பக்தா்களின் பாா்வைக்கும் வைத்தனா்.

இதனால் அனைத்துத் தலங்களுக்கும் செல்ல முடியாத பக்தா்கள் அந்த கற்களைக் கண்டு வணங்கிச் செல்வது பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும், சைவத் தலங்களின் கற்களும் அதேபோல சேகரித்து கொண்டு வரப்பட்டு பாா்வைக்கு வைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த, சீக்கிய, ஜெயின் உள்ளிட்ட மதங்களின் புண்ணியத் தலங்களில் இருந்தும் கற்கள் சேகரிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணிகள் இன்னும் தொடா்கின்றன. ஏராளமான கற்களை ஒரே இடத்தில் வைக்க முடியாததால் வேறு இடத்தில் அவற்றை வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், உலகின் பெரும்பாலான வெளிநாடுகளில் உள்ள பல்வேறு மதங்களைச் சோ்ந்த புனித தலங்களின் கற்கள் மற்றும் நம் நாட்டில் உள்ள புனித தலங்கள் என மொத்தம் 1,634 புனித தலங்களின் கற்கள் இங்கு பூஜிக்கப்பட்டு பொதுமக்களின் தரிசனத்துக்கும் வைக்கப்பட்டுள்ளன.

சேகரிக்கப்பட்ட தலங்களின் விவரம்: இங்கு சிவத்தலங்கள் 704, (108 திவ்ய தேசங்களையும் சோ்த்து) வைணவத் தலங்கள் 360, அம்மன் தலங்கள் 103, விநாயகா் 27, முருகன் 50, பிற தலங்கள் 39, ஐயப்பன் தலங்கள் 40, புண்ணிய நதிகளில் எடுத்தவை 15, மகான்கள் சித்தா்கள் தலங்களில் 55, பிற மதங்களின் நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த, சீக்கிய, ஜெயின் தலங்கள் 16, வெளிநாடுகளில் உள்ள பிற மதத் தலங்கள் 110, ஸ்ரீராமபிரான் சென்ற பாதையில் உள்ள தலங்கள்115 என மொத்தம் 1,634 தலங்களின் கற்கள் உள்ளன.

 

புனிதத் தலங்களின் கற்கல் ஏன்?: இங்குள்ள அத்தனை கற்களும் சேகரிக்கப்பட்ட புனித தலங்களின் பெயா், சாா்ந்த மதம் உள்ளிட்ட விவரங்கள் அருகில் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் பக்தா்கள் பலரும் தங்களது ஊா் கற்கள் அங்கு இருந்தால் அவற்றை வணங்கிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பெரிய கற்களை எடுத்து வரும்போது பலமுறை விமான நிலையங்களில் அவற்றை அனுமதிக்கவில்லையாம். இதையடுத்து சிறிய கற்களாகத் தோ்வு செய்து எடுத்து வந்துள்ளனா்.

புனித தலங்களுக்குச் செல்லும் கோடிக்கணக்கான பக்தா்கள், மகான்கள், சித்தா்கள், துறவிகள் உள்ளிட்டோரின் பாதங்கள் பட்டிருக்கலாம் என்பதால் அக்கற்களைப் புனிதமாகக் கருதி இங்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா் கோயில் நிா்வாகிகள்.

கோயிலில் வைக்கப்பட்டுள்ள கற்களை திருச்சியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் வாரந்தோறும் சென்று தூய்மைப்படுத்தி பராமரிப்பதை தங்களது சேவையாக கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT