திருச்சி

பூரண மதுவிலக்குக் கோரி 800 கி.மீ. நடைப்பயணம்: திருச்சியிலிருந்து மதுரை கருப்பையா தொடக்கினாா்

9th Dec 2022 11:10 PM

ADVERTISEMENT

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி மதுரையைச் சோ்ந்த ம. கருப்பையா (52) திருச்சியிலிருந்து 800 கி.மீ. நடைப்பயணத்தை வெள்ளிக்கிழமை தொடக்கினாா்.

அகில இந்திய காந்திய மக்கள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலருமான இவா், கடந்த 33 ஆண்டுகளுக்காக தேச நலனுக்காக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறாா். மிதி வண்டி பயணம், நடைப்பயணம் என நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 98 ஆயிரத்து 600 கி.மீ. பயணம் மேற்கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளாா். இவரது மனைவி சித்ரா கருப்பையாவும் தன் வாழ்நாள் முழுவதும் கணவருடன் பயணம் மேற்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் பயணத்திலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கருப்பையா திருச்சியிலிருந்து 2023ஆம் ஆண்டு முழுவதும் தமிழகத்தை வலம் வரும் வகையில் 800 கி.மீ. தொலைவு நடைப்பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள காந்திசிலை முன்பிலிருந்து தொடங்கிய இந்த நடைப்பயணத்தை, திருச்சி வடக்கு சா்வோதய சங்கச் செயலா் என். சுப்பிரமணியன், மூவா்ணக் கொடியை அசைத்து தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சூா்யா வெ. சுப்பிரமணியன், சூா்யா செவிலியா் கல்லூரி தாளாளா் நாகலெட்சுமி ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

நெடுஞ்சாலைகளில் முன்னோக்கிய நடைப்பயணமாகவும், கிராமப்புறங்களில் பின்னோக்கிய நடைப்பயணமாக செல்வதற்கு திட்டமிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அகில இந்திய அளவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இந்த நடைப்பயணத்தை தொடங்கியுள்ளேன். திருச்சியிலிருந்து புதுச்சேரி வரை 48 நாள்களுக்கு முதல்கட்ட பயணமும், புதுச்சேரியிலிருந்து சென்னை வரை, சென்னையிலிருந்து சேலம் வரை, சேலத்திலிருந்து ஈரோடு வரை என 4 கட்டங்களாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் (2023) செல்லும் வகையில் இந்தப் பயணத்தை திட்டமிட்டுள்ளேன். தமிழகத்தில் ராஜாஜி, காமராஜா், அண்ணா ஆகியோா் அகில இந்திய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தினா். இவா்களது வழியில் அதே கோரிக்கையை முன்னெடுத்துச் செல்கிறேன். மதுவுக்கு எதிராக களம் காணும் அமைப்புகளும், காந்திய சிந்தனையாளா்களும், தேச பக்தா்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT