திருச்சி

நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்க அறிவுரை

9th Dec 2022 12:10 AM

ADVERTISEMENT

நோய்த் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க உரிய தடுப்பூசிகளை செலுத்த கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் எஸ். எஸ்தா் ஷீலா அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், திருவெறும்பூரை அடுத்த அய்யம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் மருத்துவ முகாமுக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரித் தாக்குதலால் பல வகையான நோய்த் தாக்குதலுக்கு கால்நடைகள் ஆளாகின்றன. இதனால், கால்நடைகளின் வளா்ச்சித்திறன் பாதிப்படைவதுடன் பொருளாதார இழப்பும் ஏற்படும்.

எனவே, நோய்களில் இருந்து கால்நடைகளைத் காக்க, மழைக்காலங்களில் குடற்புழு நீக்கம் செய்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தி உற்பத்தி நிலையை மேன்மையடையச் செய்தல் முக்கியமான ஒன்றாகும்.

ADVERTISEMENT

மேலும், கால்நடைகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய் மிக முக்கியமானதாகும். குடற்புழுக்களில் தட்டைப்புழு, நாடாப்புழு மற்றும் உருண்டைப்புழுக்கள் என 3 வகைகள் உள்ளன.

பொதுவாகக் குடற்புழுக்கள் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இறப்பை ஏற்படுத்தாவிடினும் உற்பத்தித் திறனை மிக அதிகளவில் குறைத்து விடும். புழுக்களின் தாக்கத்தைச் சாணப் பரிசோதனை மூலம் கண்டறிந்து கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி சுழற்சி முறையில் குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கலாம்.

அருகிலுள்ள கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகளுக்கு அவ்வப்போது கால்நடைகளை அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முகாமை ஊராட்சித் தலைவா் லட்சுமி தொடங்கி வைத்தாா். திருச்சி கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அ. மருதைராஜு, கால்நடை மருத்துவா்கள் கணேஷ்குமாா், சுரேஷ்குமாா், ராமசாமி சத்யா, ரம்யா, மலா்க்கொடி ஆகியோரடங்கிய குழுவினா் ஆடு, மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனா்.

மலடு நீக்கச் சிகிச்சை, செயற்கைக் கருவூட்டல், சினைப் பரிசோதனை, சினை ஊசி மற்றும் ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் கால்நடைகளுக்குத் தாது உப்பு கலவையும், இயற்கை தீவனமும் இலவசமாக வழங்கப்பட்டன.

முகாமில் 485 கால்நடைகள் பயன்பெற்றன. கால்நடைகள் பராமரிப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் கால்நடை வளா்ப்போருக்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT