திருச்சி

சாலையோரம் வீசப்பட்ட ஆண் சிசு: கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

9th Dec 2022 11:12 PM

ADVERTISEMENT

திருச்சி அருகே சாலையோரம் வீசப்பட்ட ஆண் சிசுவை போலீஸாா் வியாழக்கிழமை இரவு மீட்டனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்பு இருப்பதாக கூறப்படும் கல்லூரி மாணவி விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருச்சி முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் வியாழக்கிழமை இரவு ஒரு குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தனா். அப்போது, அங்கு பிறந்து ஓரிரு நாள்களே ஆனநிலையில் ஆண் சிசு கிடந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சிசுவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு குழந்தைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஜீயபுரம் அருகே உள்ள எலமனூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று திருச்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். ஆற்றங்கரையில் கிடந்த சிசு, மருத்துவமனையில் உள்ள மாணவிக்கு பிறந்தது எனக் கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன்பே மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது, அதை வெளியே தெரியாமல் மறைக்கவே சிசுவை ஆற்றங்கரையில் வீசியதாகவும் கூறப்படுகிறது. விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் விசாரணை நடத்தினால்தான் முழு விவரம் தெரியவரும் என ஜீயபுரம் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT