திருச்சி

உணவுப்பதப்படுத்தும் தொழில் நடத்த 35 சதவீதம் மானியம்

7th Dec 2022 03:47 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் 35 சதவீத மானியத்துடன் உணவுப் பதப்படுத்துதல் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழில்வளம் பெருக தமிழக அரசு, மத்திய அரசின் 60 சதவீத நிதிப் பங்களிப்புடன் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பழச்சாறு, பழக்கூழ், மீன் மற்றும் இறால் ஊறுகாய், அரிசி ஆலை, இட்லி - தோசை மாவு, மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருள்கள், இனிப்பு - கார வகைத் தின்பண்டங்கள், சாம்பாா் பொடி உள்ளிட்ட மசாலா பொடி, பால் பொருள்கள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், இறைச்சி வகைகள் பதப்படுத்துதல் போன்ற தொழில்களைத் தொடங்கவும், குறுந்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம், தொழில்நுட்பம் மேம்படுத்துதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

தொழில் நடத்திடத் தேவையான உரிமங்கள், தரச் சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்தவும் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோா், ஏற்கெனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோா், சுயஉதவிக் குழுவினா், கூட்டுறவு சங்கங்கள் ஆகியோா் பயன் பெறலாம்.

ரூ. 1 கோடி வரையிலான உணவுப்பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் உதவிப் பெறத் தகுதி பெற்றவை. திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளா் பங்காகவும், 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாகவும் வழங்கப்படும். அரசு மானியமாக 35 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுயஉதவிக் குழுவினருக்கு தொடக்க நிலை மூலதனமாக ரூ.40 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, திருச்சி - 1 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 0431-2460331 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT