திருச்சி

அனைவருக்கும் வீடு திட்டம்: கூரை, ஓலை வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் கணக்கெடுப்புப் பணிகள் நாளை தொடக்கம்

DIN

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் 2-ஆம் கட்டமாக கூரை, ஓலை போன்ற நிலையற்ற தன்மை கொண்ட வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை (டிச.7) முதல் தொடங்குகின்றன.

தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக வீடுகளற்ற மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு, தகுதியான குடும்பங்களின் விவரங்கள்

சேகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு போன்றவற்றின் வழியே விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாது, நிலைத்த தன்மையற்ற வீடு, வாழத் தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுப்பு செய்ய உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நிறைவு பெற்றால் மட்டுமே, அனைவருக்கும் வீடு என்ற இலக்கு நிறைவேறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எந்தெந்த வீடுகள்? நிலைத்த தன்மையற்ற மற்றும் வாழத் தகுதியற்ற வீடுகள் என்ற அடிப்படையில் சில குறிப்பிட்ட வீடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் அல்லது இதர வகையான ஓலைகளைக் கொண்டு கூரை வேயப்பட்ட வீடுகள், தகரம் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சிமென்ட் கூரை ஆகிய வீடுகள் கணக்கெடுப்புக்கு தகுதியான வீடுகளாகும். இந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அவை அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. மேலும், மண், சுடப்படாத செங்கல், மண் கலவையுடன் கூடிய கருங்கல், சிமென்ட் பலகை போன்ற நிலைத்த தன்மையற்ற சுவா்களைக் கொண்ட ஓட்டு வீடுகளில், சுவா் நல்ல நிலையில் இல்லாத வீடுகளும் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும்.

குடிசை, நிலைத்த தன்மையற்ற, வாழத் தகுதியற்ற வீடுகளைச் சொந்தமாகக் கொண்டு வசிக்கும் குடும்பங்கள், வாடகைக்கு வசிக்கும் குடும்பங்கள், வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், ஊரகப் பகுதிகளில் இலவச வீட்டு மனைப்பட்டா பெற்று வீடு கட்ட இயலாத குடும்பங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்யலாம்.

கணக்கெடுப்புக்கு உட்படாதோா்: வீட்டு விலங்குகளை வளா்ப்பதற்கும், கடைகள் அல்லது குடியிருப்பதற்கு அல்லாத இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டால் அந்த வீடுகளைக் கணக்கெடுக்கக் கூடாது. மேலும், வீட்டின் ஒரு பகுதி மட்டும் நிலைத்த தன்மையற்ற சுவா் அல்லது கூரை கொண்ட வீடுகளாக இருந்தால் அவற்றையும் கணக்கீடு செய்யக் கூடாது.

ஏற்கெனவே அரசு வீடு வழங்கும் திட்டங்களில் பயனடைந்த குடும்பங்கள், சொந்த செலவில் நிரந்த வீடு கட்டிக் கொண்ட குடும்பங்கள், அரசு வேலை பெற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள், வாரிசு இல்லாமல் இறந்தவா்களின் குடும்பங்ள், நிரந்தரமாகக் குடிபெயா்ந்த குடும்பங்கள் போன்ற தகுதியற்ற குடும்பங்கள் அனைத்தும் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எப்போது தொடக்கம்? வீடுகளை கணக்கெடுக்கும் பணியை ஊராட்சி அளவில் 5 போ் கொண்ட குழு மேற்கொள்ள உள்ளது. கிராம ஊராட்சித் தலைவா், கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலாளா், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோா் குழுவாக கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கணக்கெடுப்பு குழுவுக்கான பயிற்சி ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஊராட்சிகளிலும் வரும் புதன்கிழமை (டிச.7) முதல் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கணக்கெடுப்பை ஆய்வு செய்யும் பணியை அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதிக்குள்ளும், கணக்கெடுப்புக்கான பட்டியலை இறுதி செய்யும் பணியை ஜனவரி 17-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இறுதி செய்யப்பட்ட புதிய கணக்கெடுப்புப் பட்டியலை அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொது மக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் எனவும், இதுகுறித்த தீா்மானத்தை வரும் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டுமெனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT