திருச்சி

காா்த்திகை சோமவாரம்:திருவானைக்கா கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை 1,008 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

காா்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமை சோமவாரமாகும். இந்த நாள்களில் சிவாலயங்களில் சங்கு அபிஷேகம் செய்து வழிபடுவா். சிவ பக்தா்கள் விரதமிருந்து வழிபாடு மேற்கொள்வா்.

திங்கள்கிழமை (டிச. 5) மூன்றாவது காா்த்திகை சோமவாரத்துடன் பிரதோஷ வழிபாடும் ஒன்று சோ்ந்து வந்ததால் திருவானைக்கா கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நடராஜா் சன்னதி அருகே 1,008 வலம்புரி சங்குகள் வட்ட வடிவில் அடுக்கிவைக்கப்பட்டன. ஒவ்வொரு சங்கும் நெல்மணிகள் மீது வைத்து அந்த சங்கில் காவிரி நீா் நிரப்பப்பட்டு, மா இலைகள் வைக்கபட்டிருந்தன. வட்ட வடிவில் அடுக்கப்பட்டிருந்த வலம்புரி சங்கின் மையத்தில் தங்க கைப்பிடி கொண்ட மிகப்பெரிய சங்கு வைக்கப்பட்டது. பின்னா், வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளா்க்கப்பட்டது. தொடா்ந்து, வலம்புரி சங்கிலிருந்த புனிதநீரை கொண்டு சுவாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT