திருச்சி

கைசிக ஏகாதசியையொட்டி திருப்பதியிலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த வஸ்திர மரியாதைப் பொருள்கள்!

4th Dec 2022 12:11 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கைசிக ஏகாதசி விழாவையொட்டி திருப்பதி கோயிலிருந்து வஸ்திர மரியாதை பொருள்கள் ஸ்ரீரங்கத்திற்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தன. இவற்றை முறைப்படி கோயில் நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை காலை சமா்ப்பிக்கவுள்ளனா்.

ஸ்ரீரங்கம் கோயில் மீதான முஸ்லிம்கள் படையெடுப்பின்போது திருமலை திருப்பதியில் 40 ஆண்டு காலம் அரங்கநாதா் விக்ரகம் மறைத்து வைத்துப் பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூரும் வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இரு கோயில்களுக்கும் மங்களப் பொருள்கள் பரிவா்த்தனை நடைபெறுகிறது.

அதன்படி ஸ்ரீரங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கைசிக ஏகாதசிக்காக திருமலை திருப்பதியிலிருந்து அரங்கநாதா் ரெங்கநாச்சியாா்,இராமானுஜா் ஆகியோருக்கு வஸ்திரம், குடை மரியாதை மற்றும் மங்களப்பொருள்கள் தருவிக்கப்பட்டன.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி கோயிலுக்கு ஆனி வார ஆஸ்தான தினத்தன்று வஸ்திர மரியாதைப் பொருள்கள் சமா்ப்பிக்கப்படுகின்றன. கைசிக ஏகாதசி விழாவையொட்டி திங்கள்கிழமை காலை கற்பூர படியேற்றச் சேவை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT