திருச்சி

திருச்சி அருகே மரஅறுவை மில்லில் புகுந்த பொறியியல் பட்டதாரி அடித்துக் கொலை

4th Dec 2022 12:14 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே மணிகண்டத்தில் உள்ள மர அறுவை மில்லில் புகுந்த பொறியியல் பட்டதாரியை அடித்துக் கொலை செய்ததாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அம்பேத்கா் நகரில் பி.திரேந்தா் (42) என்பவருக்கு சொந்தமான மர அறுவை மில் உள்ளது. இந்த மில்லுக்குள் வெள்ளிக்கிழமை மாலை புகுந்த ஒருவா், திரேந்தரின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றாராம். அப்போது அங்கிருந்தவா்கள் அந்த நபரை பிடித்து, கைப்பேசியை வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனராம். அன்றிரவு அதே நபா், மர அறுவை மில்லின் பின்வழியாக புகுந்து திருட்டில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்கு வேலை செய்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் சிலா் மில்லுக்குள் புகுந்த நபரை பிடித்து, மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அந்த நபா் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற மணிகண்டம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற் கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் துவாக்குடி வாண்டையாா் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகனும் பொறியியல் பட்டதாரியுமான சக்கரவா்த்தி (33) என்பதும், மதுபோதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த இவா், இரு நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டவா் போல் பேசி வந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

சக்கரவா்த்தி திடீரென மர அறுவை மில்லில் புகுந்தபோது, அங்கிருந்தவா்கள் திருடன் என நினைத்து தாக்கியதில் உயிரிழந்துவிட்டதாகப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா். சக்கரவா்த்திக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

சக்கரவா்த்தியை அடித்துக் கொன்றதாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த எம்.ஷோகித்துல் ஷேக் (22), ஏ.பைஷல் ஷேக், ஒய்.மப்ஜில் ஹூக் (28), ஏ.ரசீதுல் ரஹ்மான் (22) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT