திருச்சி

திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ரூ. 535 கோடியில் புதிய குடிநீா்த் திட்டங்கள்: அமைச்சா் கே.என்.நேரு தகவல்

4th Dec 2022 12:15 AM

ADVERTISEMENT

திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ரூ. 535 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீா்வடிகால் வாரியத்தின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், திருச்சி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமை வகித்தாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், 5 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.

ADVERTISEMENT

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என். நேரு கூறியது: இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தியதில் பெரும்பாலும் குடிநீா்ப் பிரச்னைகள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன. புதிய திட்டங்கள் தொடா்பாக அந்தந்த மாவட்டத்திலிருந்து கருத்துருக்கள், திட்ட வரைவு கேட்டுள்ளோம். அவை வந்தவுடன் முதல்வரிடம் முன்மொழிவு அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரத்தில் ரூ.49.95 கோடியில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீா்த் திட்டம், கோம்பை ஊராட்சியில் ரூ.75 லட்சத்தில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டம் ஆகிய பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லால்குடி, புள்ளம்பாடி பகுதிக்கு ரூ.248.59 கோடியில் புதிதாக கூட்டுக் குடிநீா்த் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தநல்லூா், பேட்டைவாய்த்தலை, தா.பேட்டை பகுதியில் புதிய குடிநீா் திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி, க.பரமத்தியில் ரூ.443.61 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் 87 சதவீதமும், பெரம்பலூா் மாவட்டம், வேப்பூரில் ரூ.22.87 கோடியிலான குடிநீா் திட்டப் பணிகள் 75 சதவீதமும் முடிவடைந்துள்ளன. வேப்பந்தட்டையில் ரூ.34.9 கோடியில் வெள்ளாறு நீராதாரத்தைப் பெற்று கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், திருச்சி மாவட்டத்தில் 19 கூட்டுக் குடிநீா்த் திட்டங்களில் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ரூ.594.65 கோடி ஒதுக்கீடு செய்து 11 திட்டங்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 6 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூா் நகர புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு ரூ.110 கோடி, அரியலூா், செந்துறை, திருமானூா், ஆலத்தூா், வேப்பூா் பகுதிகளில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு ரூ.150 கோடி, பெரம்பலூருக்கு தனி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய குடிநீா் திட்டத்துக்கு ரூ.275 கோடி என 3 மாவட்டங்களில் ரூ. 535 கோடியில் புதிய குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தனியாக கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் அமைச்சா்.

இக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகளின் இயக்குநா் ரா.செல்வராஜ், குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி, நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ப.பொன்னையா, மாவட்ட ஆட்சியா்கள் மா.பிரதீப்குமாா் (திருச்சி), பெ. ரமண சரஸ்வதி (அரியலூா்) ப. ஸ்ரீ வெங்கடபிரியா (பெரம்பலூா்), கவிதா ராமு (புதுக்கோட்டை), திருச்சி மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், எம்பிக்கள் சு. திருநாவுக்கரசா், ஜோதிமணி மற்றும் 5 மாவட்டங்களைச் சோ்ந்த எம்எல்ஏக்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தமிழகத்தில் மட்டுமே சொத்துவரி குறைவு

மொத்தம் 600 சதுர அடி சொத்துள்ள 1.70 கோடி குடும்பங்களுக்கு 25 சதவீதம் வரி உயா்த்தப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்கு மேல் 1,200 சதுர அடி வரை உள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு 50 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. 1,200 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரை உள்ள14 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீதம் வரி உயா்த்தப்பட்டுள்ளது.

அதற்குமேல் உள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே 100 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் வரி வசூலிக்கப்படும் அளவுள்ள சொத்துக்கு மகாராஷ்டிரத்தில் ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் வசூலிக்கப்படும் சொத்துவரி மிகவும் குறைவு என்றாா் அமைச்சா் கே. என். நேரு.

ADVERTISEMENT
ADVERTISEMENT