குப்பையில்லா நகராட்சியாக திருச்சி அருகே உள்ள துவாக்குடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துவாக்குடி நகராட்சி ஆணையா் இ.பட்டுசாமி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுகள் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, தரம் பிரித்து கையாளப்பட்டு வருகிறது. 2ஆம் நிலை சேகரிப்பு முற்றிலும் தவிா்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துவாக்குடி நகராட்சி குப்பையில்லா நகராட்சியாக உருவெடுத்துள்ளது. அதன்படி, துவாக்குடி நகராட்சி குப்பையில்லா நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நட்சத்திர அங்கீகாரம் வழங்கி வருகிறது. குப்பையில்லா நகராட்சியாக துவாக்குடி அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மூன்று நட்சத்திர அங்கீகாரம் பெற உறுதிமொழி சான்றிதழுக்கு நகா்மன்றம் அனுமதியளித்துள்ளது.
இது தொடா்பாக, பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை துவாக்குடி நகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக ஸ்ரீா்ம்ம்ழ்.ற்ட்ன்ஸ்ஹந்ன்க்ண்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.