தமிழக அரசு தேசியக் கல்விக் கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஏபிவிபி மத்திய செயலாக்கக் குழு உறுப்பினா் முத்துராமலிங்கம், தேசிய செயற்குழு உறுப்பினா் மனோஜ் பிரபாகா் ஆகியோா் திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நவ. 25 முதல் 27 வரை நடைபெற்ற ஏபிவிபியின் 68ஆவது தேசிய மாநாட்டில், தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். மொழி வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மாநாட்டில் நிகழாண்டுக்கான ஏபிவிபியின் தேசிய தலைவராக ராஜ்சரண் சாஹியும், பொதுச்செயலாளராக யாக்யவல்ய சுக்ளாவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
டிச. 6ஆம் தேதி அம்பேத்கா் பிறந்த தினத்தை சமுதாய சமுத்துவ நாளாக கொண்டாடுவது, 11 ஆம் தேதி பாரதியாா் பிறந்த நாளை ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாகக் கொண்டாடுவது. ஜனவரியில் மாவட்ட அளவில் மாநாடுகள் நடத்துவது, தற்சாா்பு பாரதம் என்ற தலைப்பில் உள்நாட்டுப் பொருள்களை வாங்குவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். அதிசிறப்பு வாய்ந்த தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என்றனா்.