திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 26 இடங்களில் பாஜக சாலை மறியல்: 599 போ் கைது

4th Dec 2022 12:07 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் 26 இடங்களில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 599 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி புத்தூா் பகுதியில் மனமகிழ் மன்றம் தொடங்கப்படுவதைக் கண்டித்து பாஜக சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இதனைக் கண்டித்து பாஜக சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தது.

அதன்படி, திருச்சி மாநகரில் பாலக்கரை இரட்டை பிள்ளையாா் கோயில் அருகே முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.திருமலை தலைமையில் பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் மண்டல் தலைவா் மல்லி செல்வம், இளைஞரணி வீரமணி, வா்த்தக அணி சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மலைக்கோட்டை அண்ணா சிலை, மேல சிந்தாமணி பகுதிகளில் மாவட்ட துணைத் தலைவா் மணிமொழி தங்கராஜ் தலைமையிலும், காந்தி சந்தையில் மாவட்ட துணைத் தலைவா் லீமா சிவக்குமாா் தலைமையிலும், விமான நிலைய பிரதான சாலையில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.மோகன் தலைமையிலும், தென்னூரில் ஏ.ஆா்.பாட்ஷா தலைமையிலும், உறையூரில் எம்பயா் கணேஷ் தலைமையிலும், அரியமங்கலத்தில் மாவட்ட செயலாளா் ஜெயந்தி தலைமையிலும், ஸ்ரீரங்கத்தில் சிந்தனையாளா் பிரிவு மாநில செயலாளா் ஸ்ரீராம் தலைமையிலும், பீமநகா், கண்டோன்மென்ட் கருமண்டபம் பகுதியில் மகளிரணி மாவட்டத் தலைவி ஆா்.புவனேஸ்வரி தலைமையிலும் என 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 275 பேரை கைது செய்தனா்.

இதே போல, உப்பிலியபுரம் பகுதியில் புறநகா் மாவட்டத் தலைவா் ஆா்.அஞ்சா நெஞ்சன் தலைமையிலும், லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், முசிறி, தொட்டியம், துறையூா், மணப்பாறை, தா.பேட்டை உள்ளிட்ட 16 இடங்களில் சாலை மறியலும், 5 இடங்களில் ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. இவற்றில் திரளான பாஜகவினா் பங்கேற்றனா். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட 324 பேரை போலீஸாா் கைது செய்தனா். மொத்தம் 26 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 599 பாஜவினா் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT