திருச்சி

நெகழி இல்லாத திருச்சி மாவட்டம்: ஆட்சியா் வலியுறுத்தல்

3rd Dec 2022 01:07 AM

ADVERTISEMENT

நெகிழி இல்லாத திருச்சி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வலியுறுத்தினாா்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருள்கள் மேலாண்மை குறித்த மாவட்டக் குழுக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருள்களை தவிா்த்து நெகிழி பயன்பாடில்லா அலுவலகமாக மாற்ற வேண்டும். நெகிழி பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களான சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்கு மட்டைத் தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அனைத்து துறைகளிலும், செயல்படுத்துவதுடன், விழிப்புணா்வு ஏற்படுத்தி பொதுமக்கள் அனைவரையும் மஞ்சப் பை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். நெகிழி பொருள்களை தவிா்த்து, நெகிழி இல்லா திருச்சி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதன் விளைவுகள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் இரா. குணசீலன் விளக்கம் அளித்தாா்.

ADVERTISEMENT

மாநகரக் காவல் துணை ஆணையா் சுரேஷ், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் லெட்சுமி, உதவிப் பொறியாளா் கிருஷ்ணபிரசாந்த் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT