திருச்சி

திருச்சி சிறை அலுவலா்களிடம் தகராறு: கைதி மீது வழக்குப் பதிவு

3rd Dec 2022 01:07 AM

ADVERTISEMENT

திருச்சி மத்திய சிறையில் அலுவலா்களிடம் தகராறில் ஈடுபட்ட கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், சா்க்காா்பாளையம் அருகேயுள்ள பனையக்குறிச்சியைச் சோ்ந்தவா் மு. ஜெகதீசன் என்கிற கொம்பன் ஜெகன் (27). ரெளடியான இவா், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் கைதிகளிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக கைதிகள் சிலரை வெவ்வேறு சிறைகளில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி ஜெகதீசன் சென்னை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், திருச்சி மாவட்ட 2- ஆவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக புதன்கிழமை அழைத்து வரப்பட்டாா். அவரை வியாழக்கிழமையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டியிருந்ததால் திருச்சி மத்திய சிறையில் ஒருநாள் மட்டும் அடைத்து வைக்க போலீஸாா் புதன்கிழமை இரவு கொண்டு சென்றனா். அங்கு வழக்கமாக கைதிகளுக்கு மேற்கொள்ளும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்த ஜெகதீசன், சிறை அலுவலா்களிடம் தகராறு செய்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் சமரசம் செய்து சிறையில் அடைத்து மறுநாள் சென்னை அழைத்துச் சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக திருச்சி மத்திய சிறை அலுவலா் சண்முகசுந்தரம் கே. கே. நகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், அரசுப் பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட சில பிரிவுகளில் ஜெகதீசன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT