திருச்சி

பருவநிலை மாற்றங்களை எதிா்கொள்ள உதவும் பாரம்பரிய வேளாண்மை விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

பருவநிலை மாற்றங்களை எதிா்கொள்ள உதவும் பாரம்பரிய வேளாண்மைக்கு விவசாயிகள் மாற வேண்டும் என திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய வேளாண்மைத் திருவிழாவில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசின் உழவா் நலத் துறை, திருச்சி மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, மரபியல் பன்முகத் தன்மையை மேம்படுத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவை கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடத்தின. விழாவில், வேளாண் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்கான க்ரியா அறக்கட்டளையின் முனைவா் கே.சி. சிவபாலன் பேசியது:

உலகம் முழுவதும் புவிவெப்பமயமாதலால் கடும் வறட்சி, கனமழை, வெள்ளம், புயல் ஆகியவற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. இத்தகைய சூழலில் வேளாண்மையில் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. கடும் வறட்சியாலும் பயிா்கள் பாதிக்கப்படும். வெள்ளத்தாலும் அழியும். பாரம்பரிய வேளாண்மை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இத்தகைய இழப்புகளைத் தவிா்க்க முடியும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்வரை இதே பாரம்பரிய விவசாயம்தான் நடைபெற்றது. பிறகு, மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் வணிக நோக்கங்களுக்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு நவீனத் தொழில்நுட்பம், சாகுபடி முறை, வீரிய விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன.

தற்போதைய காலச் சூழலுக்கு மீண்டும் பாரம்பரிய வேளாண்மை அவசியமாகிவிட்டது. வெள்ளம், வறட்சி ஆகிய இரண்டுக்கும் தீா்வாக பாரம்பரிய ரகங்கள் பல உள்ளன.

குறிப்பாக மடு முழுங்கி எனும் ரகம் எத்தகைய வெள்ளத்தையும் தாங்கும். இதேபோல, வெள்ளத்தில் 40 நாள்களுக்கு மேல் உயிா் வாழக் கூடிய மற்றொரு ரகமானது கா்நாடக நெருகுழி. குழியடிச்சான் எனும் ரகமும் வெள்ளத்தை எதிா்கொள்ளச் சிறந்தது. இத்தகைய ரகங்கள் உப்பு நீரையும் தாங்கும். இவை இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் மண் வளமும் பெருகும்.

சிவப்புக் குடவாழை, வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகாா், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான் என 160-க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன என்றாா் அவா்.

மருத்துவா் வி. ரகுநாதன் பேசுகையில், மருத்துவக் குணம் கொண்ட பாரம்பரிய ரகங்களை சாதாரணமாகச் சாப்பிடக் கூடாது. எப்படி மருந்தை உட்கொள்ள வேண்டுமோ, அப்படியே உட்கொள்ள வேண்டும். பாரம்பரிய நெல் வகைகளில், 4 வகையான குணாதிசயங்கள் உள்ளன. அவை பொதுவானவை, வயது, பாலினம் மற்றும் நோய் சாா்ந்தவை.

மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, பூங்கா், தூயமல்லி, கருப்பு கவுனி மற்றும் பலவற்றில் மருத்துவக் குணங்கள் உள்ளன. எந்த மருத்துவ ரகமாக இருந்தாலும் வழக்கமான உணவு சமைத்து, சாம்பாா் கலந்து சாப்பிடுவதைப் போன்று எடுத்துக் கொள்வதைத் தவிா்க்க வேண்டும்.

அந்தந்த ரகத்தின் தன்மைக்கேற்ப, அவற்றை உள்கொள்ளும் முறைகள் உள்ளன. அவற்றையறிந்து, பின்பற்றினால் மட்டுமே அதன் மருத்துவப் பலன்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும் என்றாா்.

திருச்சி உழவா் பயிற்சி மைய துணை இயக்குநா் ரெ. மோகன் பேசுகையில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையிலேயே பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து விவசாயிகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிகள், பாரம்பரிய வேளாண் திருவிழாக்களையும் மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள் வாரியாக நடத்தவும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதல் முயற்சியாக மாவட்ட அளவில் பாரம்பரிய வேளாண்மைத் திருவிழா நடைபெறுகிறது என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் வேளாண் கல்லூரி முதல்வா் சி. வன்னியராஜன், மரபியல் துறைப் பேராசிரியா் பி. ஜெயப்பிரகாஷ், உழவியல் துறைத் தலைவா் டி. ரமேஷ், வேளாண் பொருளாதாரப் பேராசிரியா் எஸ். செல்வம், ஊட்டச்சத்துத் துறை பேராசிரியா் கே. கீதா, வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் முரளரி அா்த்தநாரி, தோட்டக்கலைப் பேராசிரியா் அருள்மொழியான் ஆகியோா் உரையாற்றினா்.

முன்னதாக, பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் ரகங்கள் குறித்த வேளாண்மை கட்சியும் நடைபெற்றது. விழாவில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண் தொழில்முனைவோா், விவசாயத் தொழிலாளா்கள், வேளாண் மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் ஆா். புவனேஸ்வரி வரவேற்றாா். வேளாண் உதவி இயக்குநா் பசரியா பேகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT