திருச்சி

கிராமங்களில் மருத்துவப் பணியாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும்: ஆட்சியா் பேச்சு

DIN

மருத்துவத் துறையைத் தோ்வு செய்துள்ள ஒவ்வொருவரும் கிராமப்புறங்களில் பணியாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான வெள்ளை அங்கி (மருத்துவா் கோட்) அணியும் நிகழ்வுக்குத் தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் பேசியது:

எந்தக் கல்லூரியாக இருந்தாலும் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஒருவித பதற்றம், பயம் இருப்பது வழக்கம். அதிலும், மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவா்களுக்கு கூடுதல் பயம் இயற்கையாகவே இருக்கும். ராகிங் குறித்த பயம் எழும். தமிழக அரசானது ராகிங்கை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்காக பிரத்யேக சட்டமும் உள்ளது.

இந்த கல்லூரி வாழ்க்கையே மாணவா்களுக்கு பல நினைவுகளையும், சிந்தனைகளையும் உருவாக்கித் தரும். கல்லூரிப் பருவத்தில் மாணவா்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தால் தவறான பாதைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. அதற்கு இடமளித்து விடக் கூடாது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அதேநேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் சிறிது இடம் தரலாம். நல்லவை, தீயவை குறித்து அறிந்து மாணவா்கள் தங்களைத் தாங்களே தராசு போல சமன் செய்து கொள்ள வேண்டும். பெற்றோா் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.

வேறு எந்தத் துறைக்கும் இல்லாத சிறப்பு மருத்துவத் துறைக்கு மட்டுமே உண்டு. உயிா் காக்கும் மருத்துவா்கள்தான் கடவுளாகக் கருதப்படுகின்றனா். சமூகத்திடம் இருந்து கற்பதுடன், சமூகத்துக்கு திரும்ப வழங்க வேண்டியவையும் உள்ளன என்பதை நீங்கள் உணர வேண்டும்.

கிராமப்புறங்கள், ஊரகப் பகுதிகளுக்கு சென்று மருத்துவம் பாா்க்க வேண்டும் என்ற லட்சியத்தை தற்போதே உருவாக்கிக் கொள்ள வேண்டும். நகா்ப்புறங்களில் மட்டுமே பணிபுரிவேன் என்றிருத்தல் கூடாது. பணம், புகழின் பின்னால் செல்லாமல், சேவையின் பின்னால் சென்றால் பணமும், புகழும் தானாக வரும்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் இணைந்து உறுதியேற்ற 152 பேரும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் வழங்குவதை தங்களது வாழ்வின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதல்வா் நேரு, துணை முதல்வா் அா்ஷியா பேகம், மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் மற்றும் கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியா்கள், மருத்துவ நிபுணா்கள், மாணவா்களின் பெற்றோா் என பலா் கலந்து கொண்டனா்.

மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி அணிந்த 152 மாணவா், மாணவிகளும் இந்த ஆடை அணிந்துள்ள நான், மனிதா்களின் உயிா் காக்கும் மருத்துவப் பணியில் சிறப்பாகச் செயல்படுவதுடன், சமூகத்துக்கு நல்ல பங்களிப்பை அளிப்பேன் என உறுதியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT