திருச்சி

மாநகராட்சி செய்திக்கு பெட்டிச் செய்தியாக வைக்க வேண்டும்....தொய்வின்றி நடைபெறும் பணிகள்: மேயா்

27th Aug 2022 04:43 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன என்றாா் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன்.

திருச்சி மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, மேலும் அவா் பேசியது:

மாநகராட்சியைப் பொருத்தவரையில் பொதுமக்களின் தேவைகள், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி ஆணையா் தினசரி அதிகாலை 5 மணிமுதல் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து விதமான பணிகளையும் முடுக்கி தீவிரப்படுத்தி வருகிறாா். எனவே பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. ஆனால், சில இடங்களில் உறுப்பினா்களுக்கு அலுவலா்கள் ஒத்துழைப்பு தருவதில்லை எனக் கூறுகின்றீா்கள். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

புதைவடிகால் பணிகளைத் தீவிரப்படுத்தவும், சாலைகளை மேம்படுத்தவும், வடிகால்களைத் தூா்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களுக்குள் தற்போது மேற்கொண்டுள்ள பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் குடிநீா்க் குழாய் உடைப்பு, சாக்கடை அடைப்பு, துப்புரவு உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ள, மண்டலங்கள் தோறும் 11 போ் கொண்ட அவசரகாலப் பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினா் மண்டலங்கள் தோறும் தினசரி ஒரு வாா்டு வீதம் அனைத்து வாா்டுகளிலும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அது குறித்து உறுப்பினா்களுக்குத் தகவல்களும் தெரிவிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் கழிவறை அமைப்பது தொடா்பாக கோயில் நிா்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரங்கம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வாகியுள்ளது.

யாத்ரி நிவாஸ் அமைக்க இடம் கொடுத்த வகையில், கோயில் நிா்வாகத்திடமிருந்து மாநகராட்சிக்குத் திருப்பித்தரவேண்டிய 5 ஏக்கா் நிலம் குறித்தும் பேசி அதனை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாக 3 மண்டலங்களில் அமைக்கப்பட்டு வரும் தெருநாய்கள் கருத்தடை மையம் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும். சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, குதிரைகளைப் பிடித்து கட்டி ஏலம் விட இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்நடைமுறை பயன்பாட்டுக்கு வரும். மாநகராட்சி உறுப்பினா்கள் அளித்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் மேயா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT