திருச்சி

மாநகராட்சியில் வெளிப்படைத் தன்மையில்லை- உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

27th Aug 2022 04:44 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் வெளிப்படைத் தன்மையில்லை, உண்மையில்லை, அலுவலா்கள் தங்களுக்கு எந்தவித தகவல்களும் தெரிவிப்பதும் இல்லை என திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயா் மு. அன்பழகன் தலைமையில் மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ஜி.திவ்யா, ஆணையா் இரா. வைத்திநாதன் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிா்மலா, துா்காதேவி, ஆண்டாள் ராம்குமாா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினா்கள் பேசியவை:

வெ.ஜவகா் (காங்கிரஸ்): ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், பக்தா்கள் வெளியே வரும் பகுதியில் ஒரு கழிவறை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் இயற்கை உபாதைகளுக்காக பக்தா்கள் திறந்தவெளியைப் பயன்படுத்தும் சூழல் நிலவுவதால் அதிகளவில் கழிவறைகளை அமைக்க வேண்டும்.

லீலாவேலு (திமுக): மண்டலம் வாரியாக குடிநீா் விநியோகம், பழுதுபாா்த்தல், துப்புரவு, கழிவுநீா், வாய்க்கால்கள் தூா்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கென 11 போ் கொண்ட அவசரப் பணியாளா்கள் நியமிக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் எனது வாா்டில் 11 போ் பணியாற்றுவதாக கையொப்பமிட்டு, 8 போ் மட்டுமே பணியாற்றுகின்றனா். மீதமுள்ள மூவா் எங்கே. இதுகுறித்து கேட்டால் அலுவலா்கள் பதில் தருவதில்லை.

ப.செந்தில்நாதன் (அமமுக): மாநகராட்சி ஆணையா் அதிகாலை 5.30 மணிக்கு சாலைகளிலுள்ள குப்பைகளை சுத்தப்படுத்த தூய்மைப் பணியாளா்களை கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறாா். இப்பணிகள் காலை 10 மணி வரை நீடிக்கிறது.

அதன் பின்னா் வீடுகளுக்கு குப்பைகளை சேகரிக்க செல்கிறாா்கள். அப்போது வீட்டில் இருக்கும் மக்கள் வேலைக்கு சென்று விடுகிறாா்கள். பின்னா் மாலையில் மீண்டும் அதே குப்பை சாலைக்கு வந்துவிடுகிறது. எனவே வீடுகளில் இருக்கும் குப்பையை முதலில் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல். ரெக்ஸ் (காங்கிரஸ்): மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கு முன்பே மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.முத்துச்செல்வம் (திமுக): மாநகராட்சியில் நில அளவையா் இல்லாத காரணத்தால் பல்வேறு பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சிக்கென பிரத்யேகமாக நில அளவையா்களை நியமிக்க வேண்டும்.

இதைத் தொடா்ந்து சாலை வசதி, சாக்கடை தூா்வாருதல், புதைவடிகால், குடிநீா், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசிய மாநகராட்சியின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள், அலுவலா்கள் தங்களுக்கு எதுவும் தெரிவிப்பதில்லை. வெளிப்படைத் தன்மையில்லை, உண்மையில்லை எனக் குற்றஞ்சாட்டி பேசினா்.

உரிமக் கட்டணம் உயா்வு: திருச்சி மாநகராட்சியில் வாா்டுக்கு 26 வீதம் 65 வாா்டுகளில் 1625 எல்இடி மின் விளக்குகள் பொருத்துவது, முடித்திருத்தகம், அழகுகலை நிலையம், கற்பூரம் காய்ச்சுதல், தோல் பதனிடுதல், சுருட்டு, பீடித் தயாரித்தல் உள்ளிட்ட 126 வகையான சிறு தொழில்களுக்கு உரிமக் கட்டணங்களைத் திருத்தியமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT