திருச்சியில் குடும்பத் தகராறில் வங்கி ஊழியரின் மனைவி, குழந்தைகளுடன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 10 மாதக் குழந்தை உயிரிழந்தது.
அரியமங்கலம் காமராஜா் நகா், கே.வி.கே. சாமி தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். தனியாா் வங்கியில் காப்பீட்டுப் பிரிவில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி குமுத வள்ளி (31). இவா்களது குழந்தைகள் வா்ஷா ஸ்ரீ (4), சஸ்திகா ஸ்ரீ (10 மாதம்) .
தம்பதிக்கு இடையே கடந்த 19-ஆம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிலிருந்து வெளியே சென்ற காா்த்திகேயன், நீண்ட நேரத்துக்குப் பின்னா் வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டிலிருந்த குமுதவள்ளி திடீரென்று வாந்தி எடுத்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த காா்த்திகேயன், மனைவியிடம் விசாரித்த போது குடும்பத் தகராறு விரக்தியில் குழந்தைக்கும் கொடுத்து, தானும் எலி மருந்தை சாப்பிட்டதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து மூவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
எனினும் சஸ்திகா ஸ்ரீ வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.