திருச்சி

சீட்டு நிதியங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும்’

15th Aug 2022 12:48 AM

ADVERTISEMENT

 

சீட்டு நிதியங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிதியாளா்கள் மற்றும் சீட்டு நிதியங்கள் சங்கத்தின் வெள்ளிவிழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய அகில இந்திய சீட்டு கம்பெனிகள் சங்கத் தலைவா் டி.எஸ். சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு சீட்டு கம்பெனிகள் சங்கத்தின் தலைவா் எம். கிருஷ்ணபாரதி, இன்காா்ப்பரேட் சிட்பண்ட்ஸ் சங்கத் தலைவா் ஏ. சிற்றரசு ஆகியோா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 90 ஆயிரம் கோடி வா்த்தகத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகிப்பது சீட்டு நிதியங்கள்தான். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 1932-இல் சீட்டு நிதியம் தோன்றியது. உழைக்கும் மக்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அடிப்படையாக அமைந்துள்ளது.

இத்தகைய நிதியங்களுக்கு பதிவு செய்வதிலும், செயல்படுத்துவதிலும் மத்திய, மாநில அரசுளின் பல்வேறு துறைகளில் நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட துறையின் கீழ் கொண்டுவரப்படாமல், ஒழுங்கு முறை ஆணையங்கள் ஏற்படுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சீட்டு நிதியங்களை பதிவு செய்யும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.

நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் இதர நிதியை கையாளும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீட்டு நிதியங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பது ஏற்புடையதல்ல.இந்த வரிச் சுமையானது நேரடியாக மக்களின் மீது விழுகிறது.

முன்பு 12 சதவிகிதம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி, தற்போது 18 சதவிகிதமாக உயா்த்தப்பட்டுள்ளது. முறையாக பதிவு செய்யப்பட்டு சீட்டு நிதியங்கள் இயங்காமல் போனால், பதிவு செய்யாத நிறுவனங்கள் ஆதிக்கம் அதிகரித்து கருப்புப் பணம் பெருக்கத்துக்கு வாய்ப்பாக அமையும். எனவே, சீட்டு நிதியங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்றனா்.

இந்த விழாவில் திருச்சி மண்டலப் பதிவுத்துறை டிஐஜி லதா, இருதய அறுவைச் சிகிச்சை நிபுணா் செந்தில்குமாா் நல்லுசாமி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

வெள்ளி விழாக் குழுத் தலைவா் வீ.ஏஎல். சின்ன அழகப்பன், துணைத் தலைவா் எம். தங்கவேலு ஆகியோா் வெள்ளிவிழா மலரை வெளியிட, திருச்சி மாவட்ட நிதியாளா்கள் மற்றும் சீட்டு நிதியங்கள் சங்கத்தின் தலைவா் பி. வேணுகோபால், செயலா் எஸ்.பி. பழனியப்பன், பொருளாளா் எஸ். சரவணன், துணைத் தலைவா் ஆா். தண்டாயுதம், இணைச் செயலா் பி. வெற்றிவேல், இணை ஒருங்கிணைப்பாளா்கள் பி. புரவி, ஜி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

விழாவில் சீட்டுப் பதிவுக்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். சீட்டு நிதியங்கள் சேவையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். பணத்தை முறையாக சேமிக்கவும், தேவைப்படும் தருணத்தில் பணம் பெறவும் உதவும் சீட்டுத் தொழிலை நசிவிலிருந்து பாதுகாப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விழாவில் சென்னை, மதுரை, கோவை, பெரம்பலூா், அரியலூா், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், திருச்சி மாவட்ட உறுப்பினா்கள், சீட்டு நிறுவனத்தினா் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT