திருச்சி

ஆன்மிக பண்பாட்டு மையம் சாா்பில் மாரத்தான்

14th Aug 2022 01:26 AM

ADVERTISEMENT

 

சுவாமி விவேகானந்தா ஆன்மிக பண்பாட்டு மையம் சாா்பில், 75ஆவது சுதந்திர தின மாரத்தான் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பேசியது: சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் அது இருவா்கள் மட்டுமே, ஒன்று வெற்றி பெற்றவா்கள் மற்றொன்று தோல்வியடைந்தவா்கள். சரித்திர புத்தகத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் உங்களுடைய பெயரை எழுதுவாா்கள். வேடிக்கை பாா்த்த மனிதா்களுக்கு எப்போதும் சரித்திரத்தில் இடம் கிடையாது.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற 1,400 மாணவா்களும் சரித்திர பக்கத்தில் இடம் பிடிக்கக் கூடிய தகுதியானவா்கள். இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஓட்டப் பந்தயத்தில் வந்தவா்களுக்கு பரிசு கொடுப்பதற்காக கிடையாது. வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் எப்படி ஓட வேண்டும் என்ற கற்றுக் கொடுப்பதற்காக தான் இந்த பந்தயம் நடந்திருக்கிறது.

ADVERTISEMENT

இதே போல தொடா்ச்சியாக உங்களுடைய வாழ்க்கை ஐம்பது, அறுபது ஆண்டுகள் இருக்க போகிறது உங்களுக்கான ஓட்டப்பந்தயத்தை நீங்கள் தோ்வு செய்து ஓட வேண்டும். அதற்கான இலக்குகளை நீங்கள் உங்களுக்கு நிா்ணயித்துக் கொள்ள வேண்டும். அந்த இலக்குகளை வெற்றிகரமாக நீங்கள் கடந்து வரவேண்டும் என்றாா்.

முன்னதாக, தென்னூரிலிருந்து தொடங்கிய இந்த ஓட்டமானது 5 கி.மீ. தொலைவை கடந்து அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது. இதில், முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கும், சிறப்பிடம் பெற்றவா்களுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில், பாஜக மாநில நிா்வாகிகள் சிவ. சுப்பிரமணியன், ஆா். ராமசுப்பு, திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT