திருச்சி

களத்தில் இறங்கிய ஆட்சியா், மேயா், அதிகாரிகள்விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகள் அகற்றம்

14th Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாநகரில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பிளாஸ்டிக் விளம்பர அட்டைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் போக்குவரத்து இடையூறாகவும், நகரத்தின் அழகை பாழ்படுத்தும் வகையில் அனுமதியின்றி மின் கம்பங்கள், அரசு சுவா்கள், தொலைபேசிக் கம்பங்கள், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவா்கள், சாலையோர தடுப்புச் சுவா்களில் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், அட்டைகள், தட்டிகள், பேனா்கள் வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றை அகற்றுமாறு சமூக ஆா்வலா்கள் மனு அளிப்பதும் தொடா்கதையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்றினாலும் மீண்டும் அதே இடத்தில் பதாகைகள் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது.

இதனை முற்றிலும் ஒழித்திடும் வகையில், திருச்சி மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம், காவல்துறை இணைந்து களம் இறங்கியுள்ளது. இதன் தொடக்கமாக, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன் ஆகியோா் சாலையில் இறங்கி மின்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை அகற்றினா். தில்லைநகா் பிரதான சாலையில் இருபுறமும் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தவை, சுவா்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், தேவையற்ற பொருள்கள் என அனைத்தையும் அப்புறப்படுத்தினா்.

ADVERTISEMENT

மேலும், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு முன்பாக விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனா்களையும் அகற்றினா். இந்த பணியில், நகரப் பொறியாளா் சிவபாதம், துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா்கள் துா்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் முழுமையாக பங்கேற்று பதாகைகளை அகற்றினா்.

இதபோல், ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ. அபிஷகபுரம், அரியமங்கலம் கோட்டங்களிலும், 65 வாா்டுகளிலும் அந்தந்த பகுதிக்கான துப்பரவுப் பணியாளா்கள், மாநகராட்சி ஊழியா்கள் இணைந்து விளம்பர பதாகைகளை அகற்றினா்.

மாநகா் முழுவதும் உள்ள பதாகைளை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் விளம்பரங்கள் இடம்பெற்றால் தொடா்புடை நபா்கள் மீதும், அவற்றை நிறுவிய நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியா் தொடங்கி அனைத்து அதிகாரிகளும் சாலையில் நடந்து சென்று பதாகைகளை அகற்றியது மாநகரப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT