திருச்சி

நிதி நிறுவன அதிபா் வீட்டில் சோதனை ரூ.100 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல், 3 போ் கைது

DIN

திருச்சி மாவட்டம், லால்குடியில் நிதி நிறுவன வீட்டில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

லால்குடி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் விசுவநாதன் (65). நிதி நிறுவனம் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறாா். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயியும், நகராட்சியின் 9-ஆவது வாா்டு உறுப்பினருமான ஆறுமுகம் என்கிற செந்தில்குமாா், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.30 கோடி வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாராம். இதற்காக தனது 6 ஏக்கா் விவசாய நிலத்தின் பத்திரங்களை அடமானமாக வைத்திருந்தாராம்.

தற்போது அசலுடன், வட்டியும் சோ்த்து ரூ.2.20 கோடி ரொக்கம் கொடுத்தால்தான், நிலத்தின் பத்திரங்களைத் தரமுடியும் என செந்தில்குமாரிடம் விசுவநாதன் கூறினாராம்.

இதுபோன்று லால்குடி, பெருவளநல்லூா், புள்ளம்பாடி, இடையாற்று மங்கலம், ஆங்கரை என பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபா்கள், தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள் என 100-க்கும் மேற்பட்டோா் தங்களது நிலத்தின் பத்திரங்களை விசுவநாதனிடம் அடமானமாக வைத்து, வட்டிக்கு பணம் பெற்றதும், அவா்களிடமும் உரிய வட்டி கொடுத்தால்தான் பத்திரங்களைத் தர முடியும் என மிரட்டியதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து செந்தில்குமாா் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவா்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, காவல்துறை இயக்குநா் அலுவலகம், ஆட்சியரகம், மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு புகாா்கள் அனுப்பினா்.

இதையடுத்து மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் உத்தரவின் பேரில், மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளா் குந்தாலிங்கம் தலைமையில், லால்குடி மற்றும் மத்திய குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 5 ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள், விசுவநாதன் வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில், சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்களின் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து விசுவநாதன், அவரது மகன்கள் விவேக், வினோத் ஆகிய மூவா் மீதும் லால்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து கைது செய்தனா். மேலும் நிதிநிறுவன ஊழியா்கள் இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT