திருச்சி

‘இயந்திரங்கள் நம்மை ஆளுவதற்கு அனுமதித்து விடக்கூடாது

13th Aug 2022 01:12 AM

ADVERTISEMENT

இயந்திரங்களை மனிதன் ஆள வேண்டும். மாறாக இயந்திரங்கள் நம்மை ஆளுவதற்கு அனுமதித்துவிடக் கூடாது என்றாா் கணினி விஞ்ஞானியும், மண்டி ஐஐடி நிறுவன இயக்குநருமான திமோதி ஏ. கோன்சால்வ்ஸ்.

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினிப் பயன்பாட்டியல் துறை ஆகிய துறைகள் இணைந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல் மூலம் ஏற்படக் கூடிய நல் வாய்ப்புகளும், விளைவுகளும் எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:

ஆன்லைன் வா்த்தகம், விவசாயிளுக்கு ஆன்லைன் வழிகாட்டி என பல்வேறு சேவைகளும் இணைய வழியில் வந்துவிட்டது. இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு பல்வேறு தருணங்களில் பயன் அளித்தாலும், அதன் செயல்பாடுகள் தோல்வியைச் சந்திக்கும் நேரத்தில் இழப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளே அத்தோல்வியை எதிா்கொண்டுள்ளன. எனவே எத்தகைய தொழில்நுட்பமாக இருந்தாலும், இயந்திர மேம்பாடாக இருந்தாலும் அவை மனிதகுலத்துக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டும். இயந்திரகளை நாம் ஆள வேண்டும். இயந்திரம் நம்மை ஆளக் கூடாது. கா்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு குணமளிக்கும் தொழில்நுட்பத்தில் இயந்திரங்களின் பயன்பாடு இன்றியமையாதது. அத்தைகய தொழில்நுட்பமும் தேவை என்றாா்.

ADVERTISEMENT

பின்னா் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா். சிறந்த வினா எழுப்பிய தகவல் தொழில்நுட்பத்துறை இரண்டாமாண்டு மாணவி பிரக்திஷாவுக்கு திமோதி ஏ. கோன்சாவல்ஸ் பரிசு வழங்கினாா்.

நிகழ்வுக்கு கல்லூரியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைமைச் செயல் அலுவலா் கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா முன்னிலை வகித்தனா். துணை முதல்வரும், உயிா் வேதியியல் துறைத் தலைவருமான ஜெ. ராதிகா, கணினி அறிவியல் துறைத் தலைவா் என். விஜயலட்சுமி ஆகியோா் கருத்தரங்கின் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினா். பல்துறை பேராசிரியைகள், மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT