திருச்சி

நேருக்குநோ் மோதி தீப்பிடித்த லாரிகள்:ஓட்டுநா் உள்பட இருவா் கருகிச் சாவு

12th Aug 2022 12:29 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரிகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் கருகி உயிரிழந்தனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள வள்ளியூருக்கு அரியலூரிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு புதன்கிழமை இரவு புறப்பட்ட லாரி, துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.

அப்போது திருச்சி பெல் தொழிற்சாலையிலிருந்து தூத்துக்குடிக்கு காற்றாலைப் பொருள்களை இறக்கிவிட்டு போட்டி போட்டு வந்து கொண்டிருந்த இரு லாரிகள் உரசிக் கொண்டதில் ஒரு லாரியானது மாற்றுச் சாலைக்குச் சென்று சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் இரு லாரிகளும் தீப்பற்றி எரிந்தன.

ADVERTISEMENT

அப்போது காற்றாலை லாரியில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரான உத்தரபிரதேச மாநிலம் டிகைடா பகுதியைச் சோ்ந்த இந்திராமணிபால் (36), பிரதாப்கா் பகுதியைச் சோ்ந்த கிளீனா் பவன்பட்டேல் (26) ஆகிய இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். டி.எஸ்.பி. ராமநாதன், காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சடலங்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT