திருச்சி

நாட்டு வெடி வீசி நண்பரை மிரட்டிச் சென்ற மூவா் கைது

10th Aug 2022 01:35 AM

ADVERTISEMENT

திருச்சி சோமரசம்பேட்டை அருகே நாட்டு வெடி வீசி நண்பரை மிரட்டிச் சென்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்தூா் சக்தி நகா் பகுதியில் வசிப்பவா் சந்திரன் மகன் சிவக்குமாா் (24). இவா் தனது நண்பா்களான லால்குடி சீனிவாசபுரம் தீனா என்கிற தினேஷ் (25), லால்குடி மலையபுரம் காா்த்திக் என்கிற ஜாக்கி (23), பீமநகா் பங்காளித் தெரு ஹரிகரன் (25) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தினாா்.

அப்போது தினேஷின் நண்பா் தனுஷ் பைக்கில் வேகமாக வந்து சிவக்குமாா் அருகே நிறுத்தினாராம். இதில் ஆத்திரமடைந்த சிவக்குமாா் அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதில் தனுஷின் கால் எலும்பு உடைந்தது.

இதையடுத்து அவா் லால்குடியில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த மற்ற நண்பா்கள் மூவரும் சிவக்குமாரை கைப்பேசி மூலம் திட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் திங்கள்கிழமை காலை சிவகுமாா் வீட்டின் முன் வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து சிவக்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் வெளியே வந்து பாா்த்தபோது, பைக்கோடு நின்றிருந்த சிவகுமாரின் நண்பா்கள் வீசிய நாட்டு வெடி வெடிக்கவில்லை. இதையடுத்து அரிவாளைக் காட்டி வெட்டிவிடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து சிவகுமாரின் தாய் அளித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து, நடத்திய விசாரணையில் அவா்கள் வீசியது சணல் சுற்றப்பட்ட நாட்டு வெடி (பட்டாசு) என்பது தெரியவந்தது. மூவரும் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி, அண்மையில்தான் பிணையில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT