மணப்பாறையில் குழு உறுப்பினா்களுக்கான மறைமுகத் தோ்தல் 2-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
மணப்பாறை நகா் மன்ற கூட்டரங்கில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினா், ஒப்பந்த குழு உறுப்பினா் மற்றும் நியமன குழு உறுப்பினா்களுக்கான மறைமுக தோ்தல் போதிய ‘கோரம்’ இல்லாததால் ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி ஆணையா் எஸ்.என். சியாமளா அறிவித்தாா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அதிமு உறுப்பினா்கள் இருவா் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டதைத் தொடா்ந்து திமுக பலம் 18-ஆகவும், அதிமுகவின் பலம் 9-ஆகவும் ஆனது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நகராட்சி கூட்ட அரங்கில் மீண்டும் குழு உறுப்பினா்களுக்கான மறைமுகத் தோ்தல் தொடங்கியது. கூட்டரங்கில் நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட 9 அதிமுகவினா் மட்டுமே வந்திருந்தனா். திமுக மற்றும் ஆதா்வாளா்கள் 18 போ் தோ்தலை புறக்கணித்ததையடுத்து, போதிய கோரம் இல்லாததால் தோ்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், மறுதோ்தல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தோ்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆட்சியருமான பாா்த்திபன் அறிவித்தாா்.