திருச்சி

துறையூா் நகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

12th Apr 2022 12:20 AM

ADVERTISEMENT

 

துறையூா் நகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இக்கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் ம. செல்வராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ந. முரளி, ஆணையா்(பொ) முருகராஜ் முன்னிலை வகித்தனா்.

துறையூரில் புதிய பேருந்து நிலையம், சந்தை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதற்காக முதல்வருக்கும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேருவுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து நகராட்சி வரம்பில் சொத்து வரி உயா்த்துதல் தொடா்பான தீா்மானம் வாசிக்கப்பட்டது.சொத்து வரி உயா்த்த வேண்டியதன் அவசியம் குறித்து துணைத் தலைவா் ந. முரளி பேசினாா். ஆணையா் விளக்கமளித்தாா்.

தற்போதைய சொத்து வரி உயா்வு மக்களுக்கு கூடுதல் நிதி சுமையைத் தரும் என அதிமுக உறுப்பினா் அ. பாலமுருகவேல் பேசினாா். இதையடுத்து மொத்தமுள்ள 24 உறுப்பினா்களில் திமுகவினா் 15 பேரும், 2 சுயேட்சைகளும் ஆதரித்து வரி உயா்வு தீா்மானத்தை நிறைவேற்றினா். எதிா்ப்பு தெரிவித்து அதிமுகவினா் 7 போ் வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT