பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டண உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி, தஞ்சாவூா், நாகை, பெரம்பலூா், கரூா், அரியலூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரு பாடத்துக்கு ரூ. 50 ஆக இருந்த தோ்வுக் கட்டணத்தை ரூ.150 ஆகவும், ரூ. 100 ஆக இருந்த மதிபெண் சான்றிதழ் கட்டணத்தை ரூ.500 ஆகவும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயா்த்தியுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுமைக்குட்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் முன் மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அதன்படி திருச்சி காட்டூா் உருமு தனலட்சுமி கல்லூரி முன் 100க்கும் மேற்பட்ட மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உயா்த்திய தோ்வுக் கட்டணத்தை திரும்பப் பெறாவிட்டால் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.