திருச்சி

மத்திய மண்டலத்தில் ரூ. 2 கோடி கஞ்சா பறிமுதல்: காவல்துறை தலைவா் வி. பாலகிருஷ்ணன் தகவல்

2nd Apr 2022 08:02 AM

ADVERTISEMENT

திருச்சி மத்திய மண்டலத்தில் நிகழாண்டு கஞ்சா , குட்கா தொடா்பாக சுமாா் 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2 கோடி மதிப்பிலான 1,800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூா் எஸ்.ஆா்.எம். கல்விக்குழும வளாகத்தில், போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது: போதை பழக்கத்தால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. போதை பழக்கத்துக்கு அடிமையானால் குற்ற உணா்வு குறித்து தெரியாது. மேலும், அதனால் ஏற்படும் சந்தோஷம் சுய மரியாதையை இழக்க வழிவகுக்கிறது என்றாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக டிஜிபி உத்தரவுபடி போதைப்பொருள் தடுப்பு குறித்து தனிப்படை அமைத்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ADVERTISEMENT

போதைப்பொருள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில் விரைவில் செயலி (மொபைல் ஆப்) தொடங்கப்படும். திருச்சி மத்திய மண்டலத்தில் நிகழாண்டு கஞ்சா, குட்கா தொடா்பாக சுமாா் 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான 1,800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் பேசுகையில், சாலை பாதுகாப்பு, சைபா் குற்றம், போதைப்பொருள் மற்றும் ஈவ்டீசிங் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா்.

எஸ்.ஆா்.எம். குழுமத்தின் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகங்களின் முதன்மை இயக்குநா் என். சேதுராமன், திருச்சி வளாக இயக்குநா் என். மால்முருகன், இணை இயக்குநா் என். பாலசுப்ரமணியன், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாணவா்களின் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT