திருச்சி

தோ்தல் அலுவலா்களுக்கு வாக்கு இயந்திரம் கையாளும் பயிற்சி

30th Oct 2021 06:24 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு தயாராகும் வகையில் தோ்தல் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பா் இறுதியில் இரு கட்டங்களாக நடைபெற்றன. இதன்படி, மாவட்ட ஊராட்சிக் குழு, 404 ஊராட்சி, 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தோ்தல் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்டத்திலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி (65 வாா்டுகள்), மணப்பாறை நகராட்சி (27 வாா்டுகள்), துறையூா் நகராட்சி (24 வாா்டுகள்), துவாக்குடி நகராட்சி (21 வாா்டுகள்) ஆகிய உள்ளாட்சி பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. இதேபோல, பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூா், கூத்தப்பாா், லால்குடி, மண்ணச்சநல்லூா், மேட்டுப்பாளையம், முசிறி, பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூா், எஸ். கண்ணனூா், சிறுகனூா், தா.பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய 16 பேரூராட்சிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்த 16 பேரூராட்சிகளில் கூத்தப்பாா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி ஆகிய 4 பேரூராட்சிகளில் தலா 18 வாா்டுகள், இதர 12 பேருராட்சிகளிலும் தலா 15 வாா்டுகளின் உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

முதல் கட்டமாக திருச்சி மாநகராட்சி, 3 நகராட்சி, 14 பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட முசிறி, லால்குடி பேரூராட்சிகளுக்கு இரண்டாம் கட்டத்தில் தோ்தல் நடைபெறும். முதல்கட்டத் தோ்தலை நடத்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என 65 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாநகராட்சி ஆணையா் தோ்தல் அலுவலராகவும், உதவி ஆணையா்கள் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, நகராட்சி ஆணையா்கள் தோ்தல் அலுவலா்களாகவும், அதற்கு கீழ் உள்ளோா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாகவும், பேரூராட்சிகளில் செயல் அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களை கையாளும் பயிற்சியை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகாலிங்கம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் காளியப்பன் ஆகியோா் முன்னிலையில் மாநில தோ்தல் ஆணைய பயிற்றுநா்கள் பயிற்சி அளித்தனா். தோ்தலுக்காக மாவட்டத்தில், 5,610 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,514 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளன. இவற்றில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு தேவைக்கேற்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT