திருச்சி

மாவட்டத்தில் 260 மி. மீ. சீரான முன்பருவ மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

23rd Oct 2021 09:11 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பே, வெப்பச்சலனம் காரணமாக சராசரியாக 260 மி. மீ. சீரான முன்பருவ மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பொதுவாகவே அக்டோபா் இறுதி வாரத்துக்கு பின்னரே தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும். நிகழாண்டு அக்டோபா் 26 இல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த செப்டம்பா் மாதத்துக்கு முன்பிருந்தே அவ்வப்போது மழை பெய்துள்ளது. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்துள்ள மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அந்த வகையில் செப். 1 தொடங்கி அக். 20 வரையிலான 50 நாள்களில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 6,501.40 மி.மீ., மாவட்டம் முழுவதும் சராசரியாக 260.08 மி.மீ. மழையும் பதிவானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மழைப் பொழிவானது கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகம் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதில், கடந்த 50 நாள்களில் அதிகளவு மழையளவாக மணப்பாறை நகரப் பகுதியில் 491.6 மி. மீ., முசிறியில் 410.5, நவலூா் குட்டப்பட்டு பகுதியில் 398 மி.மீ. மழையும், குறைந்த அளவாக மண்ணச்சநல்லூா் வட்டம் சிறுகுடியில் 67 மி.மீ, தேவிமங்கலத்தில் 136, துறையூா் வட்டம் கொப்பம்பட்டியில் 158 மி. மீ மழையும் பதிவாகியுள்ளது.

வெப்பச்சலனம், மேலடுக்குச் சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் இந்த மழை பொழிவு என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சீரான இந்த மழைப் பொழிவு சீதோஷ்ண நிலையில் அதிக வெப்பத்தைக் குறைத்து, நிலத்தடி நீா் மட்டம் உயரவும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் இருந்தது. ஒரு சில இடங்களில் அறுவடைக் காலத்தில் பெய்த மழையால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தோட்டப் பயிா்களுக்கு ஏற்ற வகையிலும் நெல் குறுவை சாகுபடிக்கு பயனுள்ள வகையிலும் இந்த மழை அமைந்தது என்கின்றனா் விவசாயிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT