திருச்சி

நமக்கு நாமே திட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் அழைப்பு

22nd Oct 2021 05:52 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணையா் முஜிபுா் ரகுமான் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் நீா்நிலை புனரமைப்பு, தூா்வாருதல், கரையைப் பலப்படுத்துதல், விளையாட்டுத் திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்குதல், பூங்கா மேம்படுத்துதல், எல்இடி மின் விளக்கு அமைத்தல், சிசிடிவி கேமரா மேம்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மரக்கன்று நடுதல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையச் சுற்றுச்சுவா், அடிப்படை வசதி ஏற்படுத்துதல், புனரமைத்தல், மழைநீா் வடிகாலுடன் கூடிய சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

பொதுமக்களின் பங்ளிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையைச் செலுத்தினால் மீதித் தொகையை அரசே செலுத்தி பணியை மேற்கொள்ளும். இத் திட்டத்தில் தனி நபராகவோ, குழுவாகவோ, குடியிருப்போா் நலச் சங்கங்கள் மூலமாகவோ, பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் மூலமோ பணி மேற்கொள்ளலாம். இதற்கான பொதுமக்களின் பங்களிப்பை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அதன் பிறகு மாநகராட்சியின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் பங்களிப்பு 50 சதத்துக்கு மேல் இருக்கும் நிலையில், அவா்கள் விரும்பினால் பணியை அவா்களே மாநகராட்சியின் மேற்பாா்வையில் மேற்கொள்ளலாம்.

ADVERTISEMENT

இத்திட்டம் தொடா்பாக, பிஷப் நகா், வரகனேரி, யோகம் நகா், சுப்பையா தெரு, அஸ்வினி நகா், லிங்கம் நகா், செந்தண்ணீா்புரம் குடியிருப்போா் நலச் சங்கங்கள், காந்தி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கம், சென்னை சில்க்ஸ், சாரதாஸ், டிமாா்ட், சுந்தரம் மருத்துவமனை, சரவணா எலக்ட்ரிக்கல்ஸ், அப்பல்லோ மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் தங்களது பகுதியில் பூங்கா மேம்படுத்துதல், நூலகம் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளனா்.

எனவே இத் திட்டத்தின் கீழ், அவரவா் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அமைத்தல் தொடா்பாக மாநகராட்சியை அணுகலாம் என்றாா் அவா்.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT