திருச்சி மாநகர காவல்துறை 2 ஆக பிரிக்கப்பட்டு புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இதுவரை திருச்சி மாநகர எல்லை பிரிவானது கோட்டை, ஸ்ரீரங்கம், பொன்மலை, கண்டோன்மெண்ட் என்று 4 சரகங்களாகச் செயல்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக கே.கே.நகா், தில்லைநகா், காந்தி மாா்க்கெட் என 3 சரகங்கள் ஏற்படுத்தப்பட்டுக் கோட்டை சரகம் நீக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் எல்லை பிரிவானது வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு, 2 துணை ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வடக்குப் பிரிவு காவல் அதிகாரியாக சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தப் பிரிவிலுள்ள தில்லைநகா் சரகத்தில், தில்லைநகா், உறையூா், அரசு மருத்துவமனை காவல் நிலையங்களும், காந்தி சந்தை சரகத்தில் காந்தி சந்தை, பாலக்கரை, கோட்டை மகளிா், வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவும் அடங்கும். இதில் ஏற்கெனவே உள்ள ஸ்ரீரங்கம் சரகம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மாநகர குற்றப்பதிவு காப்பகமும் அடங்கும்.
தெற்குப் பிரிவு காவல் அதிகாரியாக குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையா் முத்தரசன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதில் கே.கே. நகா், கண்டோன்மெண்ட், பொன்மலை ஆகிய சரகங்கள் அடங்கும். இதில் தெற்கு போக்குவரத்து, மாநகர ஆயுதப்படை, சமூக நீதி மற்றும் மனித உரிமை, மாநகா் நுண்ணறிவுப் பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, ரோந்து பிரிவு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
இப்பிரிப்பு புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக தலைமைச் செயலகத்தின் உள்துறை கூடுதல் செயலா் பிரபாகரன் தெரிவித்தாா்.