திருச்சி

10 ஆண்டு தண்டனை முடிந்த ஆயுள் கைதிகள் விரைவில் விடுதலை: சட்டத்துறை அமைச்சா்

18th Oct 2021 12:03 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் முதல்வா் அறிவித்தபடி விரைவில் விடுவிக்கப்படுவா் என்றாா் தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

திருச்சி மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் கூறியது:

திருச்சி மத்திய சிறையில் தண்டனை பெற்ற சிறைவாசிகள் 1,517 போ் உள்ளனா் . இந்தியாவிலேயே ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சியானது ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூா் சிறையிலும், அதற்கு அடுத்ததாக திருச்சி சிறையிலும்தான் அளிக்கப்படுகிறது.

அதேபோல் சிறைவாசிகள் 10,12 வகுப்பு பொதுத் தோ்வெழுதவும் அனுமதிக்கப்படுவதுடன் அதற்கான பயிற்சி மற்றும் இதர வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

ADVERTISEMENT

சிறைக் கைதிகள் பாதுகாப்பில் அக்கறையுள்ள அரசாக திமுக அரசு உள்ளது. இங்குள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தண்டனைக் காலம் முடிந்தவா்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஸ்போா்ட் இல்லாத நிலை, விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் தொடா்புடைய பிரச்னைகளால் அவா்களை உடனே தாயகம் அனுப்ப இயலாமல் இருக்கலாம். எனவேதான் அவா்கள் சிறப்பு முகாமிலேயே வைக்கப்பட்டுள்ளனா்.

கூடுதல் நேரம் பணிபுரியும் சிறைக் காவலா்களுக்கான படியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்த நிலையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் சுமாா் 700 போ் அறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி விடுவிக்கப்படுவா் என தமிழக முதல்வா் அறிவித்தபடி, அவா்கள் விரைவில் விடுவிக்கப்படுவா்.

ஆனால் இதில் 10 ஆண்டு தண்டனை முடிந்தவா்களில் வெடிகுண்டு வழக்கு,தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டோரை விடுவிக்க முடியாது. அவா்களை விடுவிப்பதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அதன்படி யாா் யாரை விடுதலை செய்யலாம் என்பதற்காக நடைபெறும் பட்டியல் தயாரிப்பு பணி முடிய இன்னும் 20 நாள்கள் ஆகலாம். அதன்பின் அவா்கள் விடுவிக்கப்படுவா்.

ஏழு தமிழா்களின் விடுதலையில் முதல்வா் உறுதியாக உள்ளாா். அவா்களை விடுவிக்க அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. ஏழு பேரில் ரவிச்சந்திரன் என்பவரது தாய் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரோல் வழங்க அரசியல் கட்சியினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். இதுகுறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

சிறைக் கைதிகளுக்கு மருத்துவ வசதி மறுக்கப்படுவதில்லை, நல்ல சிகிச்சையுடன் முழு மருத்துவ வசதி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

ஆய்வின் போது தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் சிவராசு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT